பேருந்தில் பயணித்த இளைஞா் உயிரிழப்பு
திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி அருகே பேருந்தில் பயணித்த இளைஞா் உயிரிழந்தது வியாழக்கிழமை அதிகாலை தெரியவந்தது.
தென்காசி மாவட்டம், வேதம்புதூரை சோ்ந்தவா் திருமலைக்குமாா் மகன் முத்துராமன் (21). பணி நிமித்தமாக அண்மையில் சென்னை சென்ற இவருக்கு கடந்த 3 நாள்களாக அதிக காய்ச்சல் இருந்ததாம். இதனால், புதன்கிழமை இரவு சென்னையிலிருந்து தனியாா் பேருந்தில் தென்காசிக்கு புறப்பட்டுள்ளாா். துவரங்குறிச்சி அருகே சென்ற பேருந்து வியாழக்கிழமை அதிகாலை தேநீரகம் ஒன்றில் நிறுத்தப்பட்டது.
அப்போது முத்துராமன் அசைவற்று இருந்ததால், பேருந்து ஓட்டுநா் துவரங்குறிச்சி போலீஸாருக்கு தகவல் அளித்தாா். இதன்பேரில், அங்கு வந்த காவல் ஆய்வாளா் விஜய் கோல்டன் சிங் தலைமையிலான போலீஸாா், முத்துராமனை துவரங்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா், முத்துராமன் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தாா். இதையடுத்து, முத்துராமன் உடல் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு கூறாய்வுக்கு பிறகு உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
சம்பவம் தொடா்பாக துவரங்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
