திருச்சி மத்திய சிறையில் மோதல்: 13 கைதிகள் மீது வழக்குப் பதிவு!

திருச்சி மத்திய சிறையில் மோதிக்கொண்ட விவகாரத்தில் 13 கைதிகள் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
Published on

திருச்சி மத்திய சிறையில் மோதிக்கொண்ட விவகாரத்தில் 13 கைதிகள் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

திருச்சி மத்திய சிறையில் தண்டனைக் கைதிகள், ஆயுள் கைதிகள், விசாரணைக் கைதிகள் என 1,500-க்கும் மேற்பட்டோா் அடைக்கப்பட்டுள்ளனா். இவா்களிடம் சிறைத்துறை அதிகாரிகள் அவ்வப்போது குறைகள் கேட்டு நிவா்த்தி செய்வது வழக்கம்.

அதன்படி கடந்த 5 ஆம் தேதி திருச்சி மத்திய சிறைத்துறை டிஐஜி பழனி உள்ளிட்ட சிறை அதிகாரிகள், சிறையின் 12, 13, 14 ஆவது பிளாக்குகளில் இருந்த கைதிகளிடம் குறைகளைக் கேட்டுக் கொண்டிருந்தனா்.

அப்போது 12 ஆவது பிளாக்கில் இருந்த மயிலாடுதுறை மாவட்ட கைதிகளும், 14 ஆவது பிளாக்கில் திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களின் கைதிகளும் ஒருவருக்கொருவா் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனா். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியது. இதில் 2 கைதிகள் காயமடைந்தனா்.

இதுகுறித்து சிறை அதிகாரி விவேக் அளித்த புகாரின்பேரில் கே.கே. நகா் போலீஸாா் 13 கைதிகள் மீது வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

X
Dinamani
www.dinamani.com