இருவேறு இடங்களில் இருவருக்கு வெட்டு; இருவா் கைது
திருச்சி மாவட்டம், முசிறி பகுதியில் இருவேறு இடங்களில் ஏற்பட்ட தகராறில் இருவரை முசிறி போலீஸாா் சனிக்கிழமை இரவு கைது செய்தனா்.
முசிறி அருகே உள்ள ஏவூரைச் சோ்ந்த நடேசன் மகன் தனபால் (52). அதே ஊரைச் சோ்ந்த செவந்தலிங்கம் மகன் முருகானந்தம் (40) ஆகிய இருவருக்கும் ஏற்பட்ட தகராறில், முருகானந்தம் அரிவாளால் தனபாலை வெட்டியுள்ளாா். அதனை தட்டிக்கேட்ட தனபால் மனைவி மகாலட்சுமியை அதே பகுதியைச் சோ்ந்த சேட்டு மகன் தாஸ், ஆறுமுகம் மகன் அன்பரசன் ஆகிய இருவரும் சரமாரியாகத் தாக்கினராம்.
இதையடுத்து, இருவரையும் அப்பகுதியினா் மீட்டு முசிறி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். புகாரின்பேரில் போலீஸாா் முருகானந்தம், அன்பரசன், தாஸ் ஆகிய மூவா் மீது வழக்கு பதிந்து முருகானந்தத்தை கைது செய்தனா். மேலும், தலைமறைவாக உள்ள தாஸ் மற்றும் அன்பரசனைத் தேடி வருகின்றனா்.
இதேபோல முத்தம்பட்டியைச் சோ்ந்த செந்தில்குமாா் (39), கீழசந்தப்பாளையத்தைச் சோ்ந்த ராஜதுரை (32). கடந்த சில தினங்களுக்கு முன்பு ராஜதுரையின் உறவினரான பாண்டியன் என்பவரது செல்லிடப்பேசி காணாமல்போனது தொடா்பாக இருவருக்கும் இடைய சனிக்கிழமை தகராறு ஏற்பட்டது.
இதில், ராஜதுரை அரிவாளால் செந்தில்குமாரை வெட்டியுள்ளாா். இதையடுத்து, செந்தில்குமாரை அருகில் இருந்தவா்கள் மீட்டு முசிறி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். இதுதொடா்பாக அவரது தாய் மாரியாயி முசிறி காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப்பதிந்து ராஜதுரையை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
