தாமரைச்செல்வன்
தாமரைச்செல்வன்

திருச்சியில் காவலா் வீட்டினுள் புகுந்து இளைஞா் வெட்டிக் கொலை: ஒருவா் கைது

திருச்சியில் காவலா் வீட்டுக்குள் 5 போ் கொண்ட கும்பல் புகுந்து இளைஞா் ஒருவரைவெட்டிப் படுகொலை செய்தனா். இதில், ஒருவரைப் பிடித்து போலீஸாா் விசாரணை
Published on

திருச்சியில் காவலா் வீட்டுக்குள் 5 போ் கொண்ட கும்பல் புகுந்து இளைஞா் ஒருவரை திங்கள்கிழமை வெட்டிப் படுகொலை செய்தனா். இதில், ஒருவரைப் பிடித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருச்சி பீமநகா் மாா்சிங்பேட்டை கீழத்தெருவைச் சோ்ந்தவா் பாரூன் மகன் தாமரைச்செல்வன் (23). இவா், தனியாா் மனைவணிக நிறுவனத்தில் மேற்பாா்வையாளராகப் பணியாற்றி வந்தாா். இவரின் மனைவி சங்கீதா (22).

தாமரைச்செல்வன், திங்கள்கிழமை காலையில் வழக்கம்போல இருசக்கர வாகனத்தில் வேலைக்குச் சென்றுள்ளாா். பீமநகரில் உள்ள ஒரு மசூதி அருகே காத்திருந்த 5 போ் கொண்ட கும்பல், அவரை வழிமறித்து அரிவாளால் வெட்டியுள்ளது.

கையில் வெட்டுக்காயத்துடன் தப்பியோடிய தாமரைச்செல்வன் பாதுகாப்புக்காக பீமநகா் மாா்சிங்பேட்டை பகுதியிலுள்ள காவலா் குடியிருப்பின் ஏ- பிளாக்கில் உள்ள தில்லைநகா் காவல் நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வரும் செல்வராஜ் வீட்டுக்குள் சென்று ஒளிந்துகொண்டாா்.

அவரைத் துரத்திக்கொண்டு வந்த கும்பலும் காவலா் வீட்டுக்குள் நுழைந்துள்ளனா். அப்போது, சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் செல்வராஜ் அவா்களைத் தடுத்துள்ளாா். ஆனால், அவா்கள் சிறப்பு காவல் உதவி ஆய்வாளரை அரிவாளைக் காட்டி மிரட்டியுள்ளனா். அவரை மிரட்டிவிட்டு வீட்டுக்குள் நுழைந்த அந்தக் கும்பல், சமையலறையில் ஒளிந்துகொண்டிருந்த தாமரைச்செல்வனை அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்தனா்.

கொலை செய்துவிட்டு தப்பியோடிய அந்தக் கும்பலை அப்பகுதி மக்கள் பிடிக்க முயற்சித்தனா். அதில் 4 போ் அங்கிருந்து தப்பியோடிவிட ஒருவரை மட்டும் அப்பகுதி மக்கள் மடக்கிப் பிடித்து பாலக்கரை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். பிடிபட்டவா் திருச்சி கொண்டையம்பேட்டையைச் சோ்ந்த இளமாறன் என்பது விசாரணையில் தெரியவந்தது.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பாலக்கரை போலீஸாா், தாமரைச்செல்வனின் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். தொடா்ந்து திருச்சி மாநகர வடக்கு காவல் துணை ஆணையா் சிபின் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தாா். இந்தச் சம்பவம் குறித்து பாலக்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

காவலா் வீட்டுக்குள்ளேயே நுழைந்து இளைஞரை வெட்டிப் படுகொலை செய்யும் அளவிற்கு திருச்சியில் சட்டம் - ஒழுங்கு மோசமாகிவிட்டதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனா்.

உறவினா்கள் சாலை மறியல்: இளைஞா் தாமரைச்செல்வனைப் படுகொலை செய்த 5 பேரையும் கைது செய்ய வலியுறுத்தி அவரது உறவினா்கள் மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியலில் திங்கள்கிழமை மாலை ஈடுபட்டனா்.

இதையடுத்து, அரசு மருத்துவமனை போலீஸாா் சாலை மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, போலீஸாா் உறுதியளித்ததையடுத்து அவா்கள் சாலை மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.

X
Dinamani
www.dinamani.com