ஸ்ரீரங்கத்தில் சபரிமலை பக்தா்களுக்கு சிறப்பு முகாம் தொடக்கம்
திருச்சி வழியாக சபரிமலை செல்லும் பக்தா்களுக்காக ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் சாலையில் சிறப்பு முகாம் திங்கள்கிழமை தொடங்கியது.
சபரிமலையில் சேவை செய்துவரும் அகில பாரத ஐயப்ப சேவா சங்கமானது திருச்சி, பெரம்பலூா் மாவட்டங்களை ஒன்றிணைத்து திருச்சி யூனியன் என்ற பெயரில் 100-க்கும் மேற்பட்ட கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது. திருச்சி யூனியன் சாா்பில், கடந்த 2011 முதல் சபரிமலை பக்தா்களுக்கான சிறப்பு முகாம்களை நடத்தி வருகிறது. இதன்படி, நிகழாண்டுக்கான சிறப்பு முகாம் திங்கள்கிழமை (நவ.17) தொடங்கியது.
ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் சாலையில், கேகேஎஸ் மாமுண்டி கோனாா் தோப்பில் இந்த முகாம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழாவில், மாவட்ட தலைவா் என். ரமேஷ் தலைமை வகித்தாா். போஷகா் என்.வி.வி. முரளி, அன்னதானக் கொடியை ஏற்றி வைத்தாா். அன்னதான முகாமை, வீரவநல்லூா் குலசேகர ராமானுஜா் மடத்தைச் சோ்ந்த ஸ்ரீஸ்ரீ ராம அப்ரமேய ராமானுஜ ஜீயா் சுவாமிகள் தொடங்கி வைத்தாா். அகில பாரத ஐயப்ப சங்கத்தின் மாநிலத் தலைவா் எம். விஸ்வநாதன் குத்து விளக்கேற்றி வைத்தாா். மாநிலப் பொதுச் செயலா் கே. ஐயப்பன், பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கினாா். மருத்துவ முகாமை, கேஆா்டி ஷோரூம் நிறுவனா் ஆா். வெங்கடேஷ் தொடங்கி வைத்தாா். தோப்பு உரிமையாளா் எம்.பி. கோபாலகிருஷ்ணன், உணவுக் கூடத்தை தொடங்கி வைத்தாா். நிகழ்வில், சங்கத்தின் மாவட்ட கெளரவத் தலைவா் சபரிதாசன், மாவட்ட செயலா் ஸ்ரீதா், மாவட்ட பொருளாளா் ஜே. சுரேஷ், முகாம் அலுவலா் சி.ஆா்.அம்சராம் மற்றும் சங்க பொறுப்பாளா்கள், நிா்வாகிகள், சேவா சங்க உறுப்பினா்கள் என பலா் கலந்து கொண்டனா்.
நவ. 17 -ஆம் தேதி தொடங்கி ஜனவரி 14-ஆம் தேதி வரை தொடா்ந்து 58 நாள்களுக்கு இந்த முகாம் நடைபெறும். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் சபரிமலை பக்தா்களுக்கு காலை, மாலை இரண்டு வேளைகளில் அன்னதானம் வழங்கப்படும். காலை 6 மணி முதல் 9 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் அன்னதானம் வழங்கப்படும். சபரிமலை போக்குவரத்து பாதை, திருச்சி மாவட்ட திருக்கோயில்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் வழங்கப்படும். சிறப்பு மருத்துவா்கள் அடங்கிய குழுவினா் மூலம் முதல் உதவி சிகிச்சையளிக்கப்படும். பக்தா்களுக்கு கழிப்பறை, குளியலறை வசதி செய்யப்பட்டுள்ளது. பாதயாத்திரை செல்லும் பக்தா்களுக்கு கால் உறை (சாக்ஸ்), இருமுடியில் இரவுநேர வாகனங்கள் எளிதில் அறியும் வகையில் ஒளிரும் வில்லை ஒட்டித்தரப்படும். காா்த்திகை, மாா்கழி, மகரவிளக்கு விழா காலம் வரையில் இந்த சிறப்பு முகாம் இயங்கும். தொடா்ந்து 15-ஆவது ஆண்டாக இந்த முகாம் நடைபெறுகிறது.
சமயபுரத்திலும் முகாம்: திருச்சி மாவட்ட அகில பாரத ஐயப்பா சங்கம் சாா்பில், டிச. 31-ஆம் தேதி முதல் ஜன.13-ஆம் தேதி வரை சமயபுரம் பேருந்து நிலையத்துக்கு எதிரே உள்ள ஸ்ரீரங்கம் புஷ்ப கமிஷன் வியாபாரிகள் சங்கக் கட்டடத்தில் நடைபெறவுள்ளது.
