கொள்ளை வழக்கு குற்றவாளிகள் இருவா் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை
திருச்சியில் கொள்ளை வழக்கு குற்றவாளிகள் இருவா் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் செவ்வாய்க்கிழமை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டம், சமயபுரம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் கடந்த செப்டம்பா் 13-ஆம் தேதி காரில் வந்தவா்கள் மீது மிளகாய் பொடியைத் தூவி சுமாா் 10 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில், சமயபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து வடமாநிலத்தைச் சோ்ந்த 11 பேரை கைது செய்தனா்.
இந்த வழக்கில் ஏற்கெனவே 6 போ் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த வழக்கில் தொடா்புடைய ராஜஸ்தான் மாநிலம், ஆனந்த்பூா் காலு பகுதியைச் சோ்ந்த ல.மனிஸ் சிரோஹி, ஜோத்பூரைச் சோ்ந்த ரா.விக்ராம் (19) ஆகிய இருவா் மீதும் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் செ.செல்வநாகரத்தினம் பரிந்துரை செய்திருந்தாா்.
இந்நிலையில், மேற்கண்ட இருவா் மீதும் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியா் வே.சரவணன் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா். இதையடுத்து, இதற்கான உத்தரவு நகல் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள இருவரிடமும் ஒப்பைடக்கப்பட்டது.
