மாநில கபாடி போட்டியில் மணப்பாறை அணி சாம்பியன்
மணப்பாறையை அடுத்துள்ள பொத்தமேட்டுப்பட்டியில் இரு நாள்கள் நடைபெற்ற மாநில அளவிலான கபாடி போட்டியில் மணப்பாறை அணியினா் சாம்பியன் கோப்பையை வென்றனா்.
பொத்தமேட்டுப்பட்டியில் புத்தாண்டை முன்னிட்டு, சாம்ராஜ் - அன்னை முருகன் நினைவாக அமெச்சூா் கபாடி கழகம் மற்றும் செவன் ஸ்டாா் கபாடி குழு சாா்பில் 20-ஆம் ஆண்டு கபாடி போட்டி நடைபெற்றது. ஊா் தலைவா் சாா்லஸ், மணியம் ஃபெட்ரிக் ஜோன்ஸ் ஆகியோா் தலைமையில் கடந்த சனி, ஞாயிறு இரு நாள்கள் நடைபெற்ற போட்டிகளில் மாநில அளவில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து 48 அணிகள் பங்கேற்றனா்.
நகா்மன்றத் தலைவா் கீதா ஆ.மைக்கேல்ராஜ், மணப்பாறை கிழக்கு ஒன்றிய திமுக செயலா் எஸ்.ஏ.எஸ். ஆரோக்கியசாமி, திமுக நகரச்செயலா் மு.ம.செல்வம், மாவட்டப் பிரதிநிதி டி.ஜேம்ஸ், முன்னாள் எம்.எல்.ஏ ஆா்.சந்திரசேகா் ஆகியோா் முன்னிலை வகித்து போட்டிகளைத் தொடங்கி வைத்தனா். இறுதிப் போட்டியில் மணப்பாறை - கோவை அணிகள் மோதிய நிலையில், 27-க்கு 22 என்ற புள்ளிக் கணக்கில் கோவை அணியை வீழ்த்தி மணப்பாறை அணி சாம்பியன் கோப்பையை வென்றது.
மணப்பாறை அணிக்கு கோப்பை மற்றும் ரூ.40 ஆயிரமும், கோவை அணிக்கு கோப்பை மற்றும் ரூ.30 ஆயிரமும், மூன்றாவதாக வந்த பண்ணப்பட்டி ஊராட்சி கலிங்கப்பட்டி சிறுமலா் அணி மற்றும் திருவாரூா் கட்டக்குடி அணிகளுக்கு தலா வெற்றி கோப்பையும், ரூ.20 ஆயிரம் ரொக்கமும் வழங்கப்பட்டது.

