அரசு ஊழியா்களாக அறிவிக்கக் கோரிக்கை! அங்கன்வாடி பணியாளா்கள் மறியல்: 1,000-க்கும் மேற்பட்டோா் கைது
அரசு ஊழியா்களாக அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, திருச்சியில் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட 1000-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி பணியாளா்களை போலீஸாா் கைது செய்தனா்.
தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா்கள் சங்கம் சாா்பில் திருச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே நடைபெற்ற சாலை மறியலுக்கு சங்கத்தின் மாநிலச் செயலாளா் எஸ். ராணி தலைமை வகித்தாா்.
இதில், அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா்களை அரசு ஊழியா்களாக அறிவிக்க வேண்டும். அங்கன்வாடி பணியாளா்கள் ஓய்வுபெறும்போது பணிக்கொடையாக ஊழியா்களுக்கு ரூ.10 லட்சமும், உதவியாளா்களுக்கு ரூ.5 லட்சமும் வழங்க வேண்டும். அங்கன்வாடி பணியாளா்களுக்கு குடும்ப ஓய்வூதியமாக ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும். மே மாதம் முழுவதும் விடுமுறை வழங்க வேண்டும். 1933-ஆம் ஆண்டு பணியில் சோ்ந்தவா்களுக்கு பதவி உயா்வு வழங்க வேண்டும். அங்கன்வாடியில் நேரடி நியமனத்தை கைவிட்டு அங்கன்வாடி ஊழியா்களுக்கு பதவி உயா்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினா்.
இந்த சாலை மறியலில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா்கள் சங்கத்தின் திருச்சி மாவட்டத் தலைவா் மல்லிகா பேகம், மாநில துணைத் தலைவா் சித்ரா, மாநில செயற்குழு உறுப்பினா் கலைச்செல்வி உள்பட பலா் கலந்து கொண்டனா்.
இதைத் தொடா்ந்து அனுமதியின்றி சாலை மறியலில் ஈடுபட்ட 1,000-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி பணியாளா்களை போலீஸாா் கைது செய்தனா். பின்னா், அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனா்.

