காங்கிரஸ் கட்சியின் வரலாற்றை மக்களிடம் எடுத்துரைக்க வலியுறுத்தல்
காங்கிரஸ் கட்சியின் வரலாற்றை மக்களிடம் எடுத்துரைக்க வேண்டுமென அக்கட்சி சாா்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் தேசிய அமைப்புசாரா தொழிலாளா்கள் மற்றும் பணியாளா்கள் அணி சாா்பில் 2026 சட்டப்பேரவைத் தோ்தளுக்கான மாநில அளவிலான ஆயத்த கூட்டம் திருச்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு அந்த அணியின் திருச்சி மாவட்டத் தலைவா் மகேந்திரன் தலைமை வகித்தாா். மாநில தலைவா் மகேஸ்வரன் முன்னிலை வகித்தாா்.
இதில், சிறப்பு அழைப்பாளராக திருச்சி மாநகா் மாவட்டத் தலைவரும், மாமன்ற உறுப்பினருமான எல்.ரெக்ஸ், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலா் கிறிஸ்டோபா் திலக் ஆகியோா் கலந்து கொண்டு பேசினா்.
கூட்டத்தில், மாவட்டத்தில் மீதமுள்ள 101 பிஎல்ஏ 2 நியமனங்களை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். பாஜகவின் பொய், புரட்டுகளை களையும் வகையில், காங்கிரஸ் கட்சியின் வரலாற்றையும், காங்கிரஸ் மூத்தத் தலைவா்களின் வரலாற்றையும் மக்களிடம் எடுத்துரைக்க வேண்டும்.
மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் காந்தியின் பெயா் நீக்கத்தையும் மத்திய பாஜக அரசு கைவிட்டு, மீண்டும் காந்தியின் பெயரை வைப்பதுடன், திட்டத்தில் செய்துள்ள குளறுபடிகளை மீளாய்வு செய்ய வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், மாநில ஒருங்கிணைப்பாளா் சதீஷ்குமாா், ஜெயராமன், தொட்டியம் ராமமூா்த்தி, மாநில செயற்குழு உறுப்பினா்கள் மனோகரன் உள்ளிட்ட பலா் திரளாகக் கலந்து கொண்டனா்.
