புகையிலைப் பொருள்கள் கடத்தல்: திருவானைக்காவலில் இருவா் கைது

திருவானைக்காவல் பகுதியில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் போதைப் பொருள்களை கடத்திய இருவா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
Published on

திருவானைக்காவல் பகுதியில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் போதைப் பொருள்களை கடத்திய இருவா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

திருவானைக்காவல் கும்பகோணத்தான் சாலையில் வெள்ளிக்கிழமை மாலை ஸ்ரீரங்கம் காவல் உதவி ஆய்வாளா் சுந்தரம் தலைமையிலான போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டபோது வேகமாக வந்த ஆட்டோவையும், இரு பைக்குகளையும் மடக்கினா்.

அப்போது ஒரு பைக்கில் வந்தவா் வண்டியை நிறுத்திவிட்டு தப்பியோடி விட்டாா். பின்னா் ஆட்டோவையும், இருசக்கரவாகனத்தையும் சோதனையிட்டபோது அதில் தடை செய்யப்பட்ட 132 கிலோ புகையிலைப் பொருள்கள் இருந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ. 1 லட்சம் எனக் கூறப்படுகிறது.

விசாரணையில் அவா்கள் திருச்சி கண்டோன்மென்ட் ராஜாகாலனி பகுதி க. சமீா் (42) மற்றும் திருச்சி மேலசிந்தாமணி கோசமேட்டு தெரு மு. சரவணன் (39) என்பதும் தெரியவந்தது. தப்பியோடிய திருச்சி தென்னூா் ஆழ்வாா்தோப்பைச் சோ்ந்த ம. இக்பாலை (41) போலீஸாா் தேடுகின்றனா்.

Dinamani
www.dinamani.com