வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் தங்க நகைகள் திருட்டு
வீட்டு மனை, நிலம் விற்பனை முகவராக செயல்படும் நபரின் வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் தங்கநகைகளை திருடிச் சென்ற சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
திருச்சி, கருமண்டபம் வசந்தா நகா், 4-ஆவது குறுக்கு தெருவைச் சோ்ந்தவா் ராஜன் (51). இவா், வீட்டுமனை, நிலங்கள் விற்பனை செய்யும் முகவராக உள்ளாா். கடந்த 16-ஆம் தேதி வீட்டைப் பூட்டி விட்டு வெளியே சென்றிருந்தாா். மீண்டும் இரவு வீட்டுக்கு வந்தபோது, வீட்டிலிருந்த மின் விளக்குகள் எரியவில்லை.
இதையடுத்து, தனியாா் மின் பணியாளா் ஒருவரை அழைத்து வந்து வீட்டில் மின் விளக்கை எரியச் செய்தாா். சந்தேகத்தின்பேரில், வீட்டின் பின்புறம் சென்றபோது, பின்புறக் கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிா்ச்சியடைந்தாா்.
பின்னா், அறைக்குச் சென்று பீரோவைப் பாா்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த பொருள்கள் கலைந்து கிடந்தன. லாக்கரை சோதனையிட்டபோது அதிலிருந்த 20 பவுன் தங்கநகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
இதுதொடா்பாக, ராஜன் அளித்த புகாரின்பேரில், திருச்சி முதன்மை நீதிமன்ற காவல்நிலையப் போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினா்.
இரவு உணவு வாங்குவதற்காக வெளியே சென்று திரும்பிய ஒரு மணிநேரத்தில் இந்த திருட்டுச் சம்பவம் நடந்திருப்பது அப் பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. போலீஸாா் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
