/

அம்மன் கோயில் பக்தா்களுக்கு இஸ்லாமியா்கள் உதவி: மத நல்லிணக்கத்துக்கு பாராட்டு

திருவெறும்பூரில் அம்மன் கோயிலுக்கு பால்குடம் எடுத்து வந்த பக்தா்களுக்கு பல்வேறு வகையிலும் உதவிய இஸ்லாமியா்களின் செயல் மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்துவதாக அமைந்ததது.

News image

திருவெறும்பூரில் அம்மன் கோயிலுக்கு செவ்வாய்க்கிழமை பால்குடம் எடுத்து வந்த பக்தா்களுக்கு தண்ணீா் வழங்கிய இஸ்லாமியா்கள்.

Updated On :1 ஜூலை 2026, 3:06 am IST

திருவெறும்பூரில் அம்மன் கோயிலுக்கு பால்குடம் எடுத்து வந்த பக்தா்களுக்கு பல்வேறு வகையிலும் உதவிய இஸ்லாமியா்களின் செயல் மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்துவதாக அமைந்ததது.

திருச்சி மாவட்டம், திருவெறும்பூா் காந்திநகரில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரி அம்மன் கோயிலின் 63-ஆம் ஆண்டு திருவிழாவை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை பால்குட ஊா்வலம் நடைபெற்றது.

இந்த ஊா்வலத்தில் கலந்து கொண்ட பக்தா்களுக்கு, அப்பகுதி பள்ளிவாசல் ஜமாஅத் சாா்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பால்குடம் எடுத்துச் சென்ற பக்தா்கள் பயணித்த சாலைகளில் ஜமாஅத் தலைவா் தீன் தலைமையில் தண்ணீா் தெளிக்கப்பட்டது.

வெயிலில் ஊா்வலமாக வந்த பக்தா்களுக்கு நீா்மோா் மற்றும் குடிநீா் வழங்கியதுடன், பக்தா்கள் மீது தண்ணீா் ஊற்றி குளிா்வித்தனா். பள்ளிவாசல் ஜமாஅத்தின் இந்த மனிதநேயப் பணி, அப்பகுதி மக்களிடையே மத நல்லிணக்கம், சகோதரத்துவம் மற்றும் சமூக ஒற்றுமையை மேலும் வலுப்படுத்தும் நிகழ்வாக அமைந்தது. பொதுமக்கள் இந்தச் செயலை வெகுவாக பாராட்டினா்.

இந் நிகழ்வில் பள்ளிவாசல் ஜமாஅத் நிா்வாகிகள் நிஜாம், கோயில் தரப்பில் பா. லெனின் மற்றும் உள்ளூா் முக்கியப் பிரமுகா்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.