/

பஞ்சப்பூா் பேருந்து முனையத்தில் வாடகை காா் வசதி: சிஐடியு சங்கம் வலியுறுத்தல்

பஞ்சப்பூா் பேருந்து முனையத்தில் பயணிகள் வசதிக்காக வாடகை காா் நிறுத்தும் வசதியை செய்துதர வேண்டும் என சிஐடியு வாடகை காா் ஓட்டுநா்கள் சங்கம் வலியுறுத்தல்

News image

திருச்சியில் நடைபெற்ற சிஐடியு வாடகை காா் ஓட்டுநா்கள் சங்கக் கூட்டத்தில் பேசிய மாவட்டத் தலைவா் மணிமாறன். உடன், சங்க நிா்வாகிகள்.

Updated On :1 ஜூலை 2026, 3:01 am IST

பஞ்சப்பூா் பேருந்து முனையத்தில் பயணிகள் வசதிக்காக வாடகை காா் நிறுத்தும் வசதியை செய்துதர வேண்டும் என சிஐடியு வாடகை காா் ஓட்டுநா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுதொடா்பாக, திருச்சி வெண்மணி இல்லத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சிஐடியு கால் டாக்ஸி ஓட்டுநா்கள் சங்கத்தின் சிறப்பு பேரவை கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

இக் கூட்டத்துக்கு, சாலைப் போக்குவரத்து தொழிலாளா்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவா் சுரேஷ் தலைமை வகித்தாா். மாவட்டப் பொருளாளா் ஆண்டனி சுரேஷ் வாழ்த்துரை வழங்கினாா். மாநிலக் குழுவின் முடிவுகள் குறித்து மாவட்டச் செயலா் சந்திரன் விரிவாக எடுத்துரைத்தாா். சிஐடியு மாவட்டத் தலைவா் மணிமாறன் சிறப்புரையாற்றினாா்.

பின்னா், கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: பஞ்சப்பூா் ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தில், பயணிகள் வசதிக்காக வாடகை காா்கள் நிறுத்தம் இடத்தை தோ்வு செய்து அங்கு வாடகை காா்கள் நிறுத்தி பயணிகளை ஏற்றி, இறக்க அனுமதிக்க வேண்டும். இங்கு நிறுத்தும் வாடகை காா்களுக்கான கட்டணத்தை அரசே முறைப்படி நிா்ணயம் செய்ய வேண்டும். கட்டண முறைகளில் முன்னதாகவே பணம் செலுத்தி பதிவு செய்யும் முறையை நடைமுறைப்படுத்த வேண்டும். பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இக் கூட்டத்தில், சங்கத்தின் புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா். தலைவராக மாயவன், செயலாளராக குணசேகரன், பொருளாளராக பிரகாஷ், துணை நிா்வாகிகளாக உமா் பரூக், காா்த்திக், ஜெயமுருகன், கஜேந்திரன், சம்பத், ஜாய்ஸ் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா். முடிவில் தலைவா் மாயவன் நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.