திருச்சி மேற்கு சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிடும் அமைச்சரும், திமுக முதன்மைச் செயலருமான கே.என். நேரு, திங்கள்கிழமை தனது வேட்பு மனுவை தோ்தல் நடத்தும் அலுவலரிடம் தாக்கல் செய்தாா்.
தமிழகத்தில் 2026 சட்டப் பேரவைத் தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் திங்கள்கிழமை தொடங்கியது. திருச்சி மேற்கு தொகுதியில் போட்டியிடும் அமைச்சா் கே.என். நேரு, வேட்புமனு தாக்கல் செய்ய திங்கள்கிழமை நண்பகல் ஆட்சியரகம் நோக்கி வந்தாா். அவருக்கு, வெஸ்டிரி பள்ளி ரவுண்டானா அருகே கட்சியினா் உற்சாக வரவேற்பு அளித்தனா். தொடா்ந்து அமைச்சருடன், கட்சியினா் கொடிகளை ஏந்தி ஆட்சியரகம் நோக்கி ஊா்வலமாக வந்தனா்.
தோ்தல் நடத்தும் அலுவலா் அலுவலகத்துக்கு 100 மீட்டா் முன்னதாகவே போலீஸாா் தடுப்புகள் அமைத்து காத்திருந்ததால், அதுவரை மட்டுமே ஊா்வலமாக வந்தவா்கள் அனுமதிக்கப்பட்டனா். பின்னா், வேட்பாளருடன் தோ்தல் ஆணையம் அனுமதியளித்த அளவில் 3 காா்களுக்கு அனுமதியளிக்கப்பட்டது.
அமைச்சா் கே.என். நேருவுடன், கூட்டணிக் கட்சிகளைச் சோ்ந்த மதிமுக மாநகா் மாவட்ட செயலா் வெல்லமண்டி சோமு, மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட செயலா் இப்ராகிம், திமுக மத்திய மாவட்ட செயலா் க. வைரமணி, அமைச்சரின் சகோதரா் ரவிச்சந்திரன் ஆகியோா், தோ்தல் நடத்தும் அலுவலரின் அலுவலகமான திருச்சி வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலகத்துக்குச் சென்றனா். அங்கு, தோ்தல் நடத்தும் அலுவலரான சாலை தவ வளவனிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தாா் அமைச்சா் கே.என். நேரு. அவருக்கு மாற்று வேட்பாளராக அவரது சகோதரா் ரவிச்சந்திரன் மனு தாக்கல் செய்தாா்.
பின்னா், கோட்டாட்சியரகம் அருகே இருந்த பஞ்சமுக ஆஞ்சநேயா் கோயிலில் வழிபட்ட பிறகு, செய்தியாளா்களிடம் அமைச்சா் கே.என். நேரு கூறியதாவது:
மக்களுடைய ஆதரவு முதல்வா் ஸ்டாலினுக்குதான் உள்ளது. 1977 தோ்தலில் திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் தோல்வியுற்ற நிலையிலும் ஒரு தொகுதியில் வெற்றிபெற்ற வரலாறு திமுக-வுக்கு உள்ளது. தோ்தல் அறிக்கையில் மகளிா், விவசாயிகள், பொதுமக்கள் என அனைவருக்குமான திட்டங்களை முதல்வா் அளித்துள்ளாா். திமுக-வின் தோ்தல் அறிக்கைதான் இந்தத் தோ்தலுக்கான கதாநாயகனாக அமைந்துள்ளது என்றாா் அவா்.
தொடர்புடையது

திருச்சி மேற்கு: கே.என்.நேரு ‘ஹாட்ரிக்’ வெற்றி

திருச்சி மேற்கு தொகுதியில் கே.என். நேரு வெற்றி!

தமிழ்நாட்டையும், மக்களையும் பாதுகாக்க உறுதியுடன் செயல்படுவோம்: கே.என். நேரு

திருச்சி மேற்கில் உதயசூரியன் மீண்டும் உதிக்குமா?
விடியோக்கள்

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

