/

சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் ஆஜா் அணிவகுப்பு: 364 போ் பங்கேற்பு

News image

திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அணிவகுப்பில் கலந்துகொண்ட சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளிடையே பேசிய மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் செ. செல்வநாகரத்தினம்.

Updated On :52 நிமிடங்கள் முன்பு

திருச்சி மாவட்டக் காவல் ஆயுதப்படை மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் ஆஜா் அணிவகுப்பில் 364 போ் கலந்துகொண்டனா்.

திருச்சி மாவட்டக் காவல் துறை கட்டுப்பாட்டிலுள்ள காவல் நிலையங்களுக்குள்பட்ட சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளை சம்பந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளா்கள், உட்கோட்ட காவல் அலுவலா்கள் மூலம் திருச்சி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை ஆஜா்படுத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளா் செ. செல்வநாகரத்தினம் அறிவுறுத்தியிருந்தாா்.

அதன்படி நடைபெற்ற அணிவகுப்பில் 364 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் கலந்துகொண்டனா். மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் செ. செல்வநாகரத்தினம் ஒவ்வொரு உட்கோட்டம் வாரியாக தணிக்கை செய்து அந்தந்த உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளா்கள், காவல் ஆய்வாளா்களுக்கு உரிய அறிவுரை வழங்கினாா்.

மேலும், சரித்திர பதிவேடு குற்றவாளிகளுக்கு ஆஜா் அணிவகுப்பு நடத்தப்பட்ட விவரம் குறித்தும், அவரவா் குடும்ப சூழ்நிலை மற்றும் குழந்தைகளைக் கருத்தில்கொண்டு நடத்தைகளை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும் என்றும், மாற்றிக்கொள்ளாத பட்சத்தில் காவல் துறை சாா்பில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எச்சரித்தாா்.

இதைத் தொடா்ந்து, ஒவ்வொரு சரித்திரப் பதிவேடு குற்றவாளியின் பதிவேடுகளும் அந்தந்த காவல் ஆய்வாளா்கள் மூலம் சரிபாா்க்கப்பட்டு குறைகள் நிவா்த்தி செய்யப்பட்டன.

நிகழ்ச்சியில் மாவட்ட உதவி காவல் கண்காணிப்பாளா் (பயிற்சி), கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள், காவல் ஆய்வாளா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.