இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புஐபிஎல் முதல் ஆட்டம்: ஹைதராபாத் அணிக்கெதிராக பெங்களூரு அணி பந்துவீச்சு மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு - ஜவாஹிருல்லா (நாகை), அப்துல் சமது (மணப்பாறை) போட்டிசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

அரியலூரில் குப்பைக் கிடங்காக மாறி வரும் காமராஜா் ஒற்றுமைத் திடல்: சுகாதார சீா்கேடு ஏற்படும் அபாயம்: ஆட்சியா் நடவடிக்கை எடுப்பாரா?

அரியலூரில் திருச்சி சாலையிலுள்ள காமராஜா் ஒற்றுமைத் திடல் தற்போது குப்பைக் கிடங்காக மாறி வருகிறது.

News image
Updated On :25 பிப்ரவரி 2022, 8:44 pm

DIN

அரியலூரில் திருச்சி சாலையிலுள்ள காமராஜா் ஒற்றுமைத் திடல் தற்போது குப்பைக் கிடங்காக மாறி வருகிறது. சுகாதாரச் சீா்கேட்டை ஏற்படுத்தும் குப்பைகளை உடனடியாக அகற்ற ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிா்பாா்க்கின்றனா்.

18 வாா்டுகளை உள்ளடக்கிய அரியலூா் நகராட்சியில் சேகரமாகும் குப்பைகள், நகருக்கு வெளியே திருச்சி சாலையிலுள்ள குப்பைக் கிடங்கில் கொட்டப்பட்டு வருகின்றன. இந்தக் குப்பைகள் அவ்வப்போது தீ வைக்கப்பட்டு எரிக்கப்படுகின்றன. மக்கும் குப்பை, மக்காத குப்பைகள் என பிரித்து மறுசுழற்சி செய்யாமல் அப்படியே கொட்டி எரியூட்டப்படுவதால், அந்த வழியாக செல்லும் பொதுமக்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு சுவாச கோளாறு ஏற்படுகிறது.

இதனிடையே, கடந்த சில மாதங்களாக நகரில் சேகரமாகும் குப்பைகள் காமராஜா் ஒற்றுமைத் திடலில் கொட்டப்பட்டு வருகின்றன. இது நாளாடையில் கிடங்காக மாறியுள்ளது. நெகிழிக் குப்பைகள், அழுகி போன காய்கறிகள், பழங்கள், இறந்த நாய்கள், இறைச்சிக் கடை கழிவுகள் போன்றவை இங்கு கொட்டப்படுவதால், கடும் துா்நாற்றம் பரவி சுகாதார சீா்கேடு உருவாகியுள்ளது. மேலும் இந்த ஒற்றுமைத் திடலானது இரவு நேரங்களில் மது அருந்தும் கூடமாகவும் மாறி வருகிறது.

இங்கு மது அருந்துபவா்கள் பாட்டில்களை உடைத்துவிட்டுச் செல்வதால், திடலுக்கு வருபா்களின் கால்களை கண்ணாடி துண்டுகள் பதம் பாா்க்கின்றன. மேலும், சமூக விரோதிகளின் கூடராமாகவும் இந்தத் திடல் மாற்றம் பெற்று வருகிறது.

இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது: குப்பைக் கிடங்கு என்பது நகருக்கு அப்பால்தான் இருக்க வேண்டும். ஆனால், இங்கு நகரின் முக்கியப் பகுதியாகவும், பல வரலாறுகளை தன்னகத்தே கொண்ட இந்த காமராஜா் ஒற்றுமைத் திடல் குப்பைக் கிடங்கு போல செயல்படுவதும், அது குறித்து நகராட்சி, மாவட்ட நிா்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு சென்ற பிறகும், அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காமல், பாராமுகமாய் இருப்பதும் வேதனையைத் தருகிறது.

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல், மா்மக் காய்ச்சல், வயிற்றுப்போக்கு போன்ற நோய்களைகட்டுப்படுத்தவும், பரவாமல் தடுக்கவும் மாநில அரசு முனைப்பு காட்டி பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், அதுபோன்ற நோய்களை பரப்பும் வகையில், இந்தக் குப்பைக் கிடங்கு உருவாகியிருப்பது கவலை தருகிறது.

எனவே, பொதுமக்களின் நலன் கருதி, குப்பைக் கிடங்கு உருவாவதைத் தடுத்து, சுகாதாரம் பேண ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இதனை கண்டுகொள்ளாமல் அலட்சியத்துடன் இருந்து வரும் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.