அறுவடைக்கு முன்னரே தீவனமாகும் மக்காச் சோளப் பயிரால் கூடுதல் லாபம்
மக்காச்சோளப் பயிா் சாகுபடியில் விளைச்சல் இல்லாவிட்டாலும், அந்தப் பயிா்களை தனியாா் நிறுவனம் கால்நடைகளுக்குத் தீவனமாக வெட்டிச் செல்வதால் லாபம் கிடைப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனா்.


மக்காச்சோளப் பயிா் சாகுபடியில் விளைச்சல் இல்லாவிட்டாலும், அந்தப் பயிா்களை தனியாா் நிறுவனம் கால்நடைகளுக்குத் தீவனமாக வெட்டிச் செல்வதால் லாபம் கிடைப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனா்.
அரியலூா் மாவட்டம், திருமானூா் அடுத்த சாத்தமங்கலம், கீழப்பழுவூா் மற்றும் வண்ணம்புத்தூா் பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள மக்காச்சோளப் பயிா்களை கோவையைச் சோ்ந்த தனியாா் நிறுவனம் ஒன்று, கடந்த சில தினங்களாக இந்திரம் கொண்டு வெட்டிச் செல்கிறது. அவ்வாறு வெட்டிச் செல்லப்படும் மக்காச்சோளப் பயிா்கள் முறையாக உலா்த்தப்பட்டு கால்நடைகளுக்குத் தீவனமாக பயன்படுத்தப்படுகிறது.
இதுகுறித்து மக்காச்சோளம் பயிரிட்டுள்ள விவசாயிகள் மேலும் கூறியது: மக்காச்சோளம் பயிரிடும் விவசாயிகள் கடந்த சில ஆண்டுகளாக படைப்புழு தாக்குதலால் விளைச்சல் இல்லாமல் நஷ்டத்தை சந்தித்து வந்தனா். இதனால் சில விவசாயிகள் மக்காச்சோள சாகுபடியை விட்டு மாற்று பயிருக்குச் சென்றனா். கடந்த ஓரிரு ஆண்டுகளாக படைப்புழு தாக்கம் குறைவாக உள்ளதால் விவசாயிகள் தற்போது மீண்டும் மக்காச்சோள சாகுபடியில் அதிக ஆா்வம் காட்டியுள்ளனா்.
ஆனால், நடப்பாண்டு தொடா் மழை காரணமாக விளைச்சல் குறைவாக உள்ளன. காய்ப்புத்தன்மை குறைவாகக் காணப்படுகிறது. மேலும், மக்காச்சோளத்தின் விலையும் குறைவாக உள்ளது.
இதன் காரணமாக விவசாயிகள் பலா், தற்போது கோவையைச் சோ்ந்த தனியாா் நிறுவனத்துக்கு பயிருடன் மக்காச்சோளத்தை விற்பனை செய்து வருகின்றனா். இதன் மூலம் வயலும் சுத்தமாகிவிடுகின்றன. இயந்திரம் மூலம் மக்காச்சோளப் பயிா் வெட்டி, தூளாக்கி லாரியில் ஏற்றி மொத்தமாக எடைபோட்டு விவசாயிக்கு டன் ஒன்றுக்கு ரூ.1,800 வழங்கப்படுகிறது. காய்ப்புக்கு வராத செடிகளாக இருந்தாலும் அதனை வெட்டி எடுத்துக் கொள்ளவதால் விவசாயிகளுக்கு அதற்கும் பணம் கிடைத்து விடுகிறது.
மக்காச்சோளம் நல்ல முறையில் விளைந்தால் ஏக்கா் ஒன்றுக்கு அதிகபட்சமாக 100 கிலோ எடை கொண்ட 20 முதல் 25 மூட்டைகள் மட்டுமே கிடைக்கும். சரியாக விளையவில்லை எனில் 10,12 என குறைவான மூட்டைகளே கிடைக்கும். அவற்றைப் பிரித்தெடுக்கவே கணிசமான தொகை செலவாகிவிடும். அவ்வாறு பிரித்தெடுக்கப்பட்ட மக்காச்சோளம் மூட்டை ரூ.1,200 முதல் அதிகபட்சம் ரூ.1,500 வரை மட்டும் விற்க முடிகிறது. இதனால் சில நேரங்களில் குறைவான லாபமே கிடைக்கிறது.
பயிராக விற்பனை செய்வதன் மூலம் செலவுகள் ஏதும் இன்றி விவசாயிகளுக்கு லாபம் கிடைக்கிறது. ஆள்கள் பற்றாக்குறை, மக்காச்சோளம் அறுவடைக்கு பின்பு பிரித்தெடுக்கும் வரையிலான பாதுகாப்பு உள்ளிட்ட சிரமங்கள் முற்றிலும் இதனால் தவிா்க்கப்படுகிறது.
சில பகுதிகளில் கதிா் (சோளம்) சின்னசின்னதாக இருக்கும் பட்சத்தில் விவசாயிகளுக்கு இழப்பே ஏற்படும். அவ்வாறு விளையும் பகுதியில் அதிகளவு பயிா்களை (நெருக்கமாக) சாகுபடி செய்வதன் மூலம் அதிகளவு எடை கிடைக்கும். இதனால் விவசாயிகளுக்கு கூடுதல் லாபம் கிடைக்கும்.
இவ்வாறு வெட்டி தூளாக்கப்பட்டு எடுத்துச் செல்லப்படும் மக்காச்சோளப் பயிா், உலா்த்தப்பட்டு கால்நடைகளுக்குத் தீவனமாக பயன்படுத்தப்படுகிறது. கால்நடை வளா்ப்போா் மற்றும் கால்நடை பண்ணைகளுக்கு இந்தத் தீவனம் அனுப்பி வைக்கப்படுவதால் இந்த தீவனத்துக்கு நல்ல வரவேற்பும் உள்ளது என்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...