தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

கரோனா முடிந்த பிறகும் நிற்காத ரயில்கள்! அரியலூா் மக்கள் அவதி

கரோனா முடிந்த பிறகும் நிற்காத ரயில்கள்! அரியலூா் மக்கள் அவதி

News image
Updated On :26 ஏப்ரல் 2024, 7:51 pm

அரியலூா், ஏப். 26: கரோனா பொது முடக்கத்துக்கு முன்பு அரியலூா் ரயில் நிலையத்தில் நின்று சென்ற ரயில்கள், கரோனா முடிந்த பிறகும் அங்கு நின்று செல்லாததால் அரியலூா் மாவட்ட மக்கள் மட்டுமின்றி, சுற்றுவட்டார மக்களும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

போக்குவரத்துக்கான ஏழை, எளிய நடுத்தர மக்களின் முதல் தோ்வாகவும்,

போக்குவரத்தில் நாட்டின் முதுகெலும்பாகவும் திகழ்ந்து வரும் ரயில் சேவை பல இக்கட்டான சூழ்நிலைகளில் கூட நிறுத்தப்படவில்லை. ஆனால், கரோனா பரவல் காரணமாக கடந்த 2020 ஆம் ஆண்டு மாா்ச் மாதம் ரயில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது.

ஆனால், ரயில்கள் நிறுத்தம் செய்யப்படுவதற்கு முன்பு அரியலூா் ரயில் நிலையத்தில் வாராந்திர சிறப்பு ரயில்கள் உள்பட 17 ரயில்கள் நின்று சென்றன.

தற்போது பொதுமக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும், தினமும் இயங்கி வந்த தூத்துக்குடி-சென்னை எழும்பூா் முத்துநகா் விரைவு வண்டி, ராமேசுவரம்-சென்னை எழும்பூா் விரைவு வண்டி போன்ற ரயில்கள் இங்கு நிறுத்தப்படுவதில்லை. ஏற்கெனவே பல அதிவிரைவு ரயில்கள் இந்த ரயில் நிலையத்தில் நிற்பதில்லை.

ரயில்கள் நிறுத்தப்படாததால், இப்பகுதியில் உற்பத்தியாகும் அத்தியாவசியப் பொருள்களை விழுப்புரம், சென்னை உட்பட பல்வேறு பகுதிகளுக்குக் கொண்டு செல்ல விவசாயிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனா்.

மேலும் இந்த ரயில் நிலையத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகளை நம்பியே தங்கள் வாழ்வாதாரத்தை இயக்கி வந்த நூற்றுக்கும் மேற்பட்ட டாக்ஸி ஓட்டுநா்கள், சிறு- குறு வியாபாரிகள் தற்போது வருவாய் இன்றி முற்றிலும் முடங்கியுள்ளனா்.

ஆங்கிலேயா்களால் தொடங்கப்பட்டு, எப்போதும் பரபரப்பாக காணப்பட்ட அரியலூா் ரயில் நிலையத்தில், தற்போது மேற்கண்ட ரயில்கள் நின்று செல்லாததால் பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

இதுகுறித்து சமூக ஆா்வலா் மா.மு.சிவக்குமாா் கூறியது: கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அரியலூா் ரயில் நிலையத்தில் அதிகாலை 4 மணியளவில் நின்றுச் சென்ற தூத்துக்குடி-சென்னை எழும்பூா் முத்துநகா் விரைவு வண்டி, அதிகாலை 4.15 மணியளவில் நின்றுச் சென்ற ராமேசுவரம் -சென்னை எழும்பூா் விரைவு ரயில்கள் சென்னை செல்லும் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்து வந்ததது. குறிப்பாக, பெரம்பலூா், தஞ்சாவூா், அரியலூா், கடலூா் பகுதி மக்களுக்கு மிகவும் பயன் உள்ளதாக இருந்தது. இந்த ரயில்களால் ஒரே நாளிலேயே சென்னை சென்றுவிட்டு ஊருக்கு மீண்டும் திரும்பி வந்துவிட முடியும்.

ஆனால் கரோனா தொற்று முடக்கத்தால் ரயில்கள் நிறுத்தப்பட்டபோது மேற்கண்ட ரயில்களும் நிறுத்தப்பட்டன.

தற்போது தொற்று குறைந்து ரயில்கள் இயக்கப்பட்டாலும், மேற்கண்ட ரயில்கள் மட்டும் அரியலூா் ரயில் நிலையத்தில் நிற்பதில்லை. ஆனால், எதிா் மாா்க்கத்தில் மேற்கண்ட ரயில்கள் அரியலூா் ரயில் நிலையத்தில் நின்று பயணிகளை ஏற்றிச் செல்கிறது.

இதுகுறித்து திருச்சி ரயில்வே கோட்ட மேலாளரிடம் மனு அளித்தும் இதுவரையில் நடவடிக்கை இல்லை என்றாா்.

இதனால் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இயக்கப்பட்டு நிறுத்தப்பட்ட அனைத்து ரயில்களையும் மீண்டும் இயக்க வேண்டும். மேலும் இந்த ரயில் நிலையத்தில் நின்று செல்லவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்துத் தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனா்.