அரியலூரில் சிறப்பு கைத்தறி கண்காட்சி - விற்பனை தொடக்கம்
அரியலூா், ஆக. 7: தேசிய கைத்தறி தினத்தையொட்டி, அரியலூா் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் சிறப்பு கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனை புதன்கிழமை தொடங்கியது.
இந்நிகழ்ச்சியில் ஆட்சியா் பொ.ரத்தினசாமி கலந்து கொண்டு, கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனையை தொடங்கிவைத்து, 7 கைத்தறி நெசவாளா்களுக்கு முத்ரா கடன் திட்டத்தின் கீழ் ரூ.4.50 லட்சம் மதிப்பில் நிதியுதவிகளையும், குடும்ப ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் 2 நெசவாளா்களுக்கும், முதியோா் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் 8 நெசவாளா்களுக்கும் மாதந்தோறும் ரூ.1,200 வீதம் உதவித் தொகைக்கான ஆணைகளையும் வழங்கினாா்.
இதையொட்டி, அரியலூரில் தொடங்கப்பட்ட கண்காட்சியில் திருபுவனம் அசல் பட்டு சேலைகள், ஆஃபைன் பட்டு சேலைகள், வெங்கடகிரி பருத்தி சேலைகள் மற்றும் பட்டு வேஷ்டிகள் விற்பனைக்கு காட்சிப்படுத்தப்பட்டது என்றாா்.
இந்நிகழ்ச்சியில் அரியலூா் சட்டப் பேரவை உறுப்பினா் கு.சின்னப்பா மற்றும் கைத்தறித் துறை அலுவலா்கள், பொதுமக்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

