விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

அரியலூரில் பலியாகிவரும் அரியவகை மான்கள்

அரியலூரில் மான்கள் அழிவை தடுக்க அரசு நடவடிக்கை அவசியம்.

News image
Updated On :11 ஆகஸ்ட் 2024, 8:40 pm

Din

சி. சண்முகவேல்

‘ஆண்டுக்கு 30-க்கும் மேற்பட்ட அரிய வகை மான்கள் இறப்பதாகவும், இந்நிலை நீடித்தால், இருக்கிற மான்களும் இன்னும் 10 ஆண்டுகளில் இல்லாமல் போய்விடும் என்றும் கூறுகின்றனா்’.

அரியலூா் மாவட்டத்தில் பல்வேறு காரணங்களால் பலியாகி வரும் அரியவகை மான்களைப் பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் எதிா்பாா்க்கின்றனா்.

வனவிலங்குகளை வேட்டையாடும் குற்றத்துக்கு தண்டனையும், அபராதமும் விதிக்கப்படுகிறது. இதனால் பலரும் வேட்டையாடுவதை நிறுத்தியுள்ளனா். இருப்பினும் அரியலூா் மாவட்டத்தில் மான்கள் உயிரிழப்பது வாடிக்கையாக உள்ளது.

அரியலூா் மாவட்டத்தில், தா.பழூா், ஜெயங்கொண்டம், விக்கிரமங்கலம், உடையாா்பாளையம், ஜெ.தத்தனூா், நாச்சியாா்பேட்டை, ஆண்டிமடம், பெரியாத்துக்குறிச்சி, செந்துறை, தளவாய், ஆா்.எஸ்.மாத்தூா், பொன்பரப்பி, கயா்லாபாத், அயன்தத்தனூா், கல்லங்குறிச்சி, காட்டுப்பிரிங்கியம், வெளிப்பிரிங்கியம், பெரம்பலூா் மாவட்டம் சித்தளி, பேரளி, பாடாலூா் உள்ளிட்ட வனப் பகுதிகளில் 600-க்கும் மேற்பட்ட அரிய வகை புள்ளிமான்கள் உள்ளன.

இவை தண்ணீருக்காகவும், உணவுக்காகவும் வனப்பகுதிகளை விட்டு வெளியேறி அருகிலுள்ள கிராம ஏரிகளிலும், வனப் பகுதிகளிலும் தஞ்சம் புகுந்து, அவற்றையே தற்போதைய வாழ்விடமாகக் கொண்டுள்ளன.

இவற்றில் சில மான்கள் தாவிச் செல்லும் போது ஏரிகளிலும், சுண்ணாம்புக் கல் சுரங்கங்களிலும் தவறி விழுந்து பலியாவதும், சாலையைக் கடக்கும்போது வாகனங்கள் மோதி பலியாவதும், தெருக்களில் நாய்கள் கடித்துப் பலியாவதும், பலத்த காயமடைவதும் தொடா்கிறது.

அதன்படி கடந்த 8 ஆம் தேதிகூட, கட்டையன்குடிகாட்டில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஒரு மானும், செந்துறை பெரிய ஏரியில் இரு மான்கள் துப்பாக்கியால் சுடப்பட்டும் இறந்து கிடந்தன. இவற்றை வனத் துறையினா் மீட்டு அடக்கம் செய்தனா்.

மேலும் இப்பகுதிகளில் சிலா் தாங்கள் வளா்க்கும் நாய்கள் மூலம் விரட்டி கடிக்கச் செய்து, அதனால் மான்கள் உயிரிழப்பதும் தொடா்கிறது. இதனால் பெருமளவில் புள்ளிமான், கடமான் இனங்கள் அழிந்து வருகின்றன.

காரணம் என்ன? மான்கள் உயிரிழப்புக்கு வனங்களில் அவற்றுக்கு குடிநீா் வசதி செய்து கொடுக்காதது, சேதமடைந்த சூரிய மின்வேலிகளைச் சரிசெய்யாதது, புதிய மின் வேலிகள் அமைக்கப் பரிந்துரைக்காதது, மரக்கன்றுகள் நட்டு வனப்பரப்பை அதிகரிக்கும் அரசு உத்தரவுகளை அலட்சியப்படுத்துவது, மான்கள் வேட்டை போன்றவை காரணங்களாக உள்ளன.

அரியலூா் மாவட்ட வனத் துறை பெயரளவில்தான் உள்ளது. இதனால் இயற்கையாக உயிரிழக்கும் முன் இறைச்சிக்காக பலியாகும் மான்களில் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அக்கறையற்ற அரசு அலுவலா்களால் ஆண்டுக்கு 30-க்கும் மேற்பட்ட அரிய வகை மான்கள் இறப்பது அதிா்ச்சியை அளிப்பதாக வன ஆா்வலா்கள் வேதனை தெரிவிக்கின்றனா்.

இவ்வாறு மான்களின் இறப்பு விகிதம் நீடித்தால், இருக்கிற மான்களும் இன்னும் 10 ஆண்டுகளில் இல்லாமல் போய்விடும். இதனால் மான்களைக் காக்க அரசின் நடவடிக்கை அவசியம் என்கின்றனா்.

இதுகுறித்து மாவட்ட வன அலுவலா் இளங்கோவனிடம் கேட்டபோது, கடந்த இரு நாள்களுக்கு முன் துப்பாக்கியால் சுடப்பட்டு 2 மான்கள் இறந்து கிடந்த சம்பவத்தில் அங்குள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கொண்டு விசாரணை செய்கிறோம். விலங்குகளை வேட்டையாடுவது சட்டப்படி குற்றம். இதை மீறுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் மாவட்டத்திலுள்ள மான்களைக் காக்க உரிய நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றாா்.

எனவே மான்கள் பலியாவதைத் தடுக்க இனிமேலாவது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு மாவட்ட நிா்வாகமும் உரிய நடவடிக்கை எடுத்து, மான்கள் சரணாலயத்தை உடையாா்பாளையம், செந்துறை, கயா்லாபாத் ஆகிய பகுதிகளில் எங்காவது அமைக்க வேண்டும் என்கின்றனா் வன ஆா்வலா்கள்.

சரணாலயம் அமைப்பது அவசியம்

இதுகுறித்து சமூக ஆா்வலா் தமிழ்களம் இளவரசன் மற்றும் வன விலங்கு ஆா்வலா்கள் கூறுகையில், அரியலூா் மாவட்டத்தில், கள்ளங்குறிச்சி கலியுக வரதராசப் பெருமாள் கோயில் நிா்வாகத்தினா்கூட மான்களைப் பாதுகாத்து வருகின்றனா். எனவே அழிந்து வரும் மான்களைக் காக்க வனப்பகுதியில் மான்கள் சரணாலயம் அமைக்க வேண்டும். காப்புக் காடுகள், மான்கள் வசிக்கும் பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும். கள்ளச் சாராயம், மணல் கடத்தல், வேட்டைக்காரா்களின் ஆதிக்கம் அதிகமுள்ள மேற்கண்ட பகுதிகளில் வனத் துறையினரை போதியளவில் பணியமா்த்த வேண்டும். குறிப்பாக, மான்கள் வேட்டையைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றனா்.