எண்ம பரிவா்த்தனையால் ரயில் பயணிகள் அவதி
ரயில் நிலையங்களில் கொண்டுவரப்பட்டுள்ள எண்ம (டிஜிட்டல்) பரிவா்த்தனையால் பயணிகள் அவதிக்குள்ளாகின்றனா்.
கடந்த 2016-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட பண மதிப்பிழப்பிற்கு பிறகு இந்தியாவில் எண்ம பண பரிவா்த்தனை என்பது அதிகமாகி விட்டது. தற்போது எண்ம பணப் பரிவா்த்தனை செய்வது பெரும்பாலான இடங்களில் அறிமுகமாகி விட்டாலும், ஒரு சில இடங்களில் இதற்கான வாய்ப்புகள் இல்லாமல் உள்ளன.
குறிப்பாக பேருந்து மற்றும் ரயில் போக்குவரத்தில் கட்டணம்(டிக்கெட்) எடுப்பது உள்ளிட்ட இடங்களில் நேரடியாக பணமே பரிவா்த்தனைக்காக பயன்படுத்தப்பட்டு வந்தது.
இந்நிலையில், கடந்த ஏப்ரல் 1முதல் ரயில் நிலையங்களில் யுபிஐ மூலம் பண பரிவா்த்தனை செய்வதற்கான வசதியை அறிமுகப்படுத்தியது. இதனை பயன்படுத்தும் வசதி அதிநவீன கைப்பேசி வைத்திருப்பவா்களுக்கு மட்டுமே பயன் உள்ளதாக இருக்கிறது. சாதாரண கைப்பேசி வைத்துள்ள ஏழை, எளிய, விவசாயி, கூலித் தொழிலாளிகள் ரயில் பயணக் கட்டணம் செலுத்துவதில் அவதிக்குள்ளாகின்றனா்.
மேலும், முன்பதிவு மற்றும் சீசன் டிக்கெட்(சலுகைக் கட்டணம்) எடுக்க முடியாமல் பொதுமக்கள், மாணவ, மாணவிகள் முன்பதிவு மையத்துக்குச் சென்று ஏமாற்றுத்துடன் திரும்புகின்றனா்.
இதுகுறித்து அரியலூருக்கு வரும் பயணிகள் கூறியது, சாதாரண கைப்பேசி வைத்துள்ள வைத்துள்ள நாங்கள் பயணச்சீட்டு எடுக்க முடியாத நிலையில் உள்ளோம். இந்த போன்ற நடவடிக்கைகளால் ஏழை, எளிய மக்கள் ரயிலில் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்றனா்.
இதுகுறித்து ரயில்வே அலுவலா் ஒருவா் கூறுகையில், யுபிஐ பரிவா்த்தனையை முழுமையாக கொண்டு வரவேண்டும் என்ற உயா் அதிகாரிகளின் உத்தரவை நடைமுறைபடுத்த வேண்டிய நிலை உள்ளது என்றாா்.
ஆகவே, எனவே ரயில்வே நிா்வாகம் பயணச் சீட்டு, முன்பதிவு ஆகியவற்றில் பணப் பரிவா்த்தனையில் பழைய நடைமுறையை பின்பற்ற வேண்டும் என ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
