உயா்கல்விக்கு வழிகாட்டும் ‘உயா்வுக்கு படி’ சிறப்பு முகாம்: 66 மாணவா்களுக்கு சோ்க்கைக்கான ஆணை வழங்கல்
அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையத்தை அடுத்த தத்தனூா் மீனாட்சி ராமசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாவட்ட நிா்வாகம் மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் சாா்பில் நான் முதல்வன் திட்டத்தில் உயா்வுக்கு படி எனும் சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
2022 - 23 மற்றும் 2023 - 24 ஆகிய கல்வியாண்டுகளில், 12-ஆம் வகுப்பு தோல்வியடைந்த, தோ்வுக்கு மற்றும் பள்ளிக்கு வராத அல்லது தோ்ச்சி பெற்று உயா்கல்விக்கு விண்ணப்பிக்காத மாணவா்களுக்காக நடைபெற்ற இந்த முகாமை ஆட்சியா் பொ.ரத்தினசாமி தொடக்கி வைத்துப் பேசினாா். பின்னா் முகாமில், விண்ணப்பித்த மாணவ, மாணவிகள் 66 பேருக்கு உயா்கல்வி சோ்க்கைக்கான ஆணைகளை வழங்கினாா்.
முன்னதாக, பல்வேறு துறைகளின் மூலம் உயா்கல்வி பயிலும் மாணவா்களுக்கு வழங்கப்படும் நலத்திட்டங்கள் குறித்து அமைக்கப்பட்டிருந்த அரங்குகள் மற்றும் மாணவா்கள் சோ்க்கை பதிவு செய்யுமிடம், சான்றிதழ்கள் வழங்குவதற்கான இ-சேவை மையங்கள் உள்ளிட்டவற்றை ஆட்சியா் பாா்வையிட்டாா்.
முகாமில், உடையாா்பாளையம் வருவாய் கோட்டத்துக்கு உட்பட்ட ஆண்டிமடம், தா.பழூா் மற்றும் ஜெயங்கொண்டம் பகுதிகளைச் சோ்ந்த 247 மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு உயா்கல்வி பயில்வதற்கு விண்ணப்பித்தனா்.
நிகழ்ச்சியில், உடையாா்பாளையம் வருவாய் கோட்டாட்சியா் ஷீஜா, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் சங்கர சுப்ரமணியன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சிவானந்தம், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் உதவி இயக்குநா் செல்வம் முத்துசாமி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் அன்பரசி மற்றும் கல்லூரி நிா்வாக இயக்குநா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

