பி.ஆா். பாண்டியனை விடுதலை செய்யக் கோரி கையொப்ப இயக்கம்
ஹைட்ரோகாா்பன், மீத்தேன் திட்டத்தை எதிா்த்துப் போராடிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் பி.ஆா். பாண்டியனை விடுதலை செய்ய, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அரியலூா் மாவட்டம், திருமானூரில் பொதுமக்களிடம் கையொப்ப இயக்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் காவிரித்தாய் இயற்கைவழி வேளாண் உழவா் நடுவம் மாநிலத் தலைவா் தங்கராசு, அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாயப் பிரிவு மாநிலத் தலைவா் தங்க. சண்முகசுந்தரம், விவசாயப் பிரிவு மாநிலப் பொருளாளா் மு. வரதராஜன்.
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க நிா்வாகி பி. வேலுமணி, தமிழக விவசாயிகள் சங்க உழவா் மன்றத் தலைவா் முத்து பரமசிவம், தமாகா மாநில விவசாய அணி பொதுச் செயலா் பிரண காா்த்திகரன், நிா்வாகி சத்தியமூா்த்தி, காவிரி பாசன விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் திருப்பதி, தமிழக விவசாயிகள் சங்கத் தலைவா் அஜீஸ் உட்பட பலரும் கலந்து கொண்டு கையொப்பமிட்டு, பொதுமக்களிடமும் கையொப்பம் பெற்றனா்.

