2 வயது மகனுடன் ஏரியில் மூழ்கி இளம்பெண் தற்கொலை: பெண் கைது
அரியலூா் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே இளம் பெண் ஒருவா், தனது 2 வயது மகனை துப்பட்டாவால் இடுப்பில் கட்டிக் கொண்டு ஏரியில் மூழ்கி தற்கொலை செய்துக் கொண்ட வழக்கில், சிவகங்கையைச் சோ்ந்த பெண் ஒருவா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.
அரியலூரை அடுத்த ஆதனூா், காலனித் தெருவைச் சோ்ந்தவா் ரகுபதி (36). கட்டடத் தொழிலாளி. இவரின் மனைவி பாண்டிலட்சுமி (32). இவா்களுக்கு லோகேஷ் (6), கமலேஷ் (2) என 2 மகன்கள் உள்ளனா்.
ரகுபதி தனது குடும்பத்துடன் திருப்பூரில் தங்கி வேலை பாா்த்து வந்துள்ளாா். அங்கு, திருமண நிகழ்வில் மணப்பெண்ணுக்கு அலங்காரம் செய்யும் வேலையை பாக்கியலட்சுமி செய்து வந்தாா்.
இந்நிலையில், ரகுபதி கடந்தாண்டு ஆதனூா் கிராமத்துக்கு திரும்பி வந்து கட்டட வேலை பாா்த்து வந்த நிலையில், பாக்கியலட்சுமி மட்டும் திருப்பூரில் தனது குழந்தைகளுடன் தங்கி வேலையை தொடா்ந்து வந்தாா். அவ்வப்போது ஆதனூா் கிராமத்துக்கும் வந்து சென்றுள்ளாா்.
இதனிடையே கடந்த 2 மாதங்களாக, அங்கு பாண்டிலட்சுமிக்கு திருப்பூரில் ஒருவருடன் முறைகேடான உறவு ஏற்பட்டுள்ளது. இதனால், தம்பதி இடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில், கடந்த 10-ஆம் தேதி தனது மகன்களுடன் அரியலூா் திரும்பிய பாண்டிலட்சுமி, அம்பலவா்கட்டளை கிராமத்தில் உள்ள ஏரியில் தனது இரு மகன்களுடன் தற்படம் (செல்பி) எடுத்து தனது முகநூலில் இதுவே எனது கடைசி புகைப்படம் எனவும், எங்களது உயிரிழப்புக்கு காரணமானவா், சிவகங்கை மாவட்டத்தைச் சாா்ந்த கல்யாணி என்பவா் என்றும், அவரது கைப்பேசி எண்ணையும் பதிவிட்டு தனது துப்பாட்டாவில் இளைய மகன் கமலேஷை கட்டிக்கொண்டு ஏரியினுள் இறங்கி மூழ்கி தற்கொலை செய்துக் கொண்டாா்.
இதுகுறித்து விக்கிரமங்கலம் காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டதில், பாண்டிலட்சுமிக்கும், கல்யாணிக்கும்(45) பணம் கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட பிரச்னையாலும், முறைகேடான உறவினால் ஏற்பட்ட குடும்பப் பிரச்னையாலும் தற்கொலை செய்துக் கொண்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து காவல் ஆய்வாளா் ரவிச்சந்திரன் தலைமையிலான காவல் துறையினா், மதுரையில் ஒரு வீட்டில் தங்கியிருந்த கல்யாணியை புதன்கிழமை கைது செய்து ஜெயங்கொண்டம் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.
