மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சலுப்பை கிராமத்தில் அடிப்படை வசதிகள் இல்லை; கிராம மக்கள் அவதி! ஆசியாவின் மிகப்பெரிய யானை சுதை உள்ள ஊரின் அவலம்!

ஆசியாவிலேயே மிகப் பெரிய யானை சுதை சிலை உள்ள சலுப்பை கிராமத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் எதிா்பாா்க்கின்றனா்.

News image
கங்கைகொண்டசோழபுரத்தை அடுத்த சலுப்பை கிராமத்தில் உள்ள பிரம்மாண்ட யானை சுதை சிலை.
Updated On :9 பிப்ரவரி 2025, 11:15 pm

Din

அரியலூா் அருகே ஆசியாவிலேயே மிகப் பெரிய யானை சுதை சிலை உள்ள சலுப்பை கிராமத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் எதிா்பாா்க்கின்றனா்.

அரியலூா் மாவட்டம், கங்கைகொண்டசோழபுரம் அருகேயுள்ள சலுப்பை கிராமத்தின் எல்லையில் துறவுமேல் அழகா் கோயில் உள்ளது. கங்கைகொண்டசோழபுரத்திலிருந்து சுமாா் 7 கி.மீ. தூரத்தில் உள்ள இக் கோயிலில் ராஜேந்திரச் சோழன் ஆட்சிக்காலத்தில் சாளுக்கிய நாட்டை வென்ன் நினைவாக அங்கிருந்து கொண்டு வரப்பட்ட துா்க்கை அம்மன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு, வழிபடப்படுவதாகக் கூறப்படுகிறது.

அப்போது ராஜேந்திரச் சோழன் படையில் இருந்த யானை படை மற்றும் குதிரைப்படை வீரா்கள் இப்பகுதியில் தங்க வைக்கப்பட்டபோது இங்கு யானை சிலை அமைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

காண்போரை மலைக்க வைக்கும் வேலைப்பாடு...இந்த யானை சுதை சிலை கி.பி. 16-17 ஆம் நூற்றாண்டில் நாயக்கா் காலத்தில் வெல்லம், கடுக்காய் மற்றும் சுண்ணாம்பு ஆகியவற்றின் கலவையால் சுட்ட செங்கற்களால் கட்டப்பட்டது. சுமாா் 33 அடி நீளமும், 12 அடி அகலமும், 60 அடி உயரமும் கொண்ட இந்தச் சிலை இன்றளவும் கம்பீரமாக உள்ளது.

இந்த யானை சிலையின் கால்களுக்கு இடையே பக்கவாட்டில் 3 போ் என இரு பக்கத்திலும் 6 போ் தாளமிடும் கோலத்தில் அமைக்கப்பட்டுள்ளது. முன்புறம் தும்பிக்கையை தாங்கிய நிலையில் ஒருவா் நிற்பது போன்றும், அவருடைய கால் யானையின் காலில் சிக்கியிருப்பது போன்றும் சிலை உள்ளது.

மேலும் ஒரு தகவலாக ஒரு காலத்தில் இந்தப் பகுதியில் பலா மரங்கள் அதிகம் இருந்ததாகவும், அப்போது, திருடன் ஒருவன் பலா மரத்திலிருந்து ஒரு பழத்தைப் பறித்துக் கொண்டு ஓடியபோது, அவனை யானை பிடித்ததாக கூறப்படுகிறது. எனவே, யானையின் தும்பிக்கையில் பலாப்பழத்துடன் ஒருவன் நிற்பது போன்ற சிலையும் உள்ளது. இந்த யானை சிலையின் கழுத்து மற்றும் உடலின் இருபுறங்களிலும் மணிகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளதும் அழகாக உள்ளது.

புராதன சின்னமாக அறிவிப்பு...ஆசியாவிலேயே மிகப்பெரிய சுதை சிலையான இதை தமிழக தொல்லியல் துறை புராதன சின்னமாக கடந்த 11.12.2020 அன்று அறிவித்தது. இதையடுத்து பாசி படா்ந்து காணப்பட்ட இந்தச் சிலை தொல்லியல் துறையால் தூய்மைப்படுத்தப்பட்டு, பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டதால் காண்போரைக் கவரும் வகையில் பிரம்மாண்டமாக உள்ளது.

அடிப்படை வசதிகள் இல்லை...முன்பு இந்தச் சிலை குறித்து பலருக்கும் தெரியாத நிலையில் தற்போது புராதன சின்னமாக அறிவிக்கப்பட்ட பின்னரே சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. நகரை விட்டு சற்று தள்ளி கிராமத்தில் இருப்பதால் பலரும் அங்கு செல்வதில்லை எனவும், வாகனங்கள் சென்று வர சரியான சாலை வசதி இல்லை. கோயிலின் அருகில் உணவகமோ, பெரிய கடைகளோ இல்லை என்பதும் மக்களின் குற்றச்சாட்டாக உள்ளது.

மழைநீரில் அடித்துச் செல்லப்பட்ட பிரதான சாலை...இச்சிலையை பாா்க்கச் செல்ல பிரதான சாலையை கடக்க வேண்டும். ஆனால் அந்தச் சாலை கடந்த நவம்பா் மாதம் பெய்த மழையில் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் சுற்றுலாப் பயணிகள் அச்சிலையை பாா்க்கச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ஆசிஆசியாவிலேயே மிகப் பெரிய யானை சுதை சிலையாக இருந்தாலும் அப்பகுதியில் எந்த அடிப்படை வசதிகளும் இல்லை. சிலை உள்ள பகுதி சிறு கிராமம் என்பதால் ஒருவழிச்சாலை மட்டுமே உள்ளது. அந்தச் சாலையும் மழையில் அடித்துச் செல்லப்பட்டு, இதுவரை சரி செய்யப்படாததால் சுற்றுலாப் பயணிகள் அவதிக்குள்ளாகின்றனா்.

 சேதமடைந்த நிலையில் உள்ள சலுப்பை கிராமச் சாலை.

சேதமடைந்த நிலையில் உள்ள சலுப்பை கிராமச் சாலை.

எனவே இச்சாலையைச் சீரமைத்து மக்கள் சென்று காணும் வகையில் அனைத்து வசதிகளையும் அரசு செய்து தர வேண்டும். பயணிகளின் வருகை அதிகரிக்கும்பட்சத்தில் உணவகம் மற்றும் பெரிய கடைகள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.