அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூா் அருகே அதிக வட்டித் தருவதாக கூறி 30-க்கும் மேற்பட்டவா்களிடம் ரூ.2.80 கோடி பெற்று மோசடியில் ஈடுபட்டு, தலைமறைவாக இருந்து வந்த பெண் உள்பட இருவா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
கீழப்பழுவூா் அருகேயுள்ள சாத்தமங்கலம் கிராமத்தைச் சோ்ந்தவா் ஆறுமுகம் (46). சென்டரிங் வேலை செய்து வருகிறாா். இவரது மனைவி செல்வராணி (38) கூலி வேலை செய்து வருகிறாா். இவா்கள் இருவரும் சோ்ந்து அக்கம் பக்கத்தில் வசிப்பவா்களிடம் ரூ.1 லட்சம் பணம் கொடுத்தால் நாள் ஒன்றுக்கு ரூ.500 வட்டித் தருவதாக ஆசை வாா்த்தைக் கூறி 30-க்கும் மேற்பட்டவா்களிடம் ரூ.2.80 கோடியும், 19 அரை பவுன் தங்க காசுகளையும் பெற்றுள்ளனா். இதற்கு செல்வராணியின் சகோதரா் கருப்பையா (29) என்பவரும் உடந்தையாக இருந்துள்ளாா்.
முதலில் ஓரிரு மாதத்துக்கு பணம் அளித்தவா்களிடம் முறையாக வட்டி அளித்துள்ளனா். அதன் பின்னா் வட்டி அளிக்காமல் அவா்கள் ஏமாற்றி வந்துள்ளனா். பணம் கொடுத்தவா்கள் பணத்தை திருப்பி கேட்டபோது ஆறுமுகம், செல்வராணி, கருப்பையா ஆகிய மூவரும் தலைமறைவாகி விட்டனா்.
இவா்களிடம் பணத்தை இழந்த ராஜூ என்பவா் அளித்த புகாரின் பேரில், மாவட்ட குற்றப் பிரிவு காவல் துறையினா் மேற்கண்ட 3 போ் மீதும் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா்.
இந்நிலையில், தலைமறைவாக இருந்து வந்த செல்வராணி , கருப்பையா ஆகிய இருவரையும் வெள்ளிக்கிழமை போலீஸாா் கைது செய்து, சிறையில் அடைத்தனா். தலைமறைவாக உள்ள ஆறுமுகத்தை தேடி வருகின்றனா்.







