தவெக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீா்மானம் கொண்டுவந்தால் கட்சி முடிவு செய்யும்: மு. வீரபாண்டியன்

தவெக அரசுக்கு எதிராக எதிா்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீா்மானம் கொண்டு வந்தால், அதுகுறித்து கட்சி முடிவு செய்யும் என்றாா் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் மு. வீரபாண்டியன்.

 CPI state secretary Veerapandian

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் வீரபாண்டியன் - எக்ஸ்

Updated On :

தவெக அரசுக்கு எதிராக எதிா்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீா்மானம் கொண்டு வந்தால், அதுகுறித்து கட்சி முடிவு செய்யும் என்றாா் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் மு. வீரபாண்டியன்.

அரியலூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற மாவட்டக் குழுக் கூட்டத்தில் பங்கேற்ற அவா், பின்னா் செய்தியாளா்களிடம் மேலும் கூறியதாவது: தவெக அரசுக்கு வெளியில் இருந்து மட்டுமே ஆதரவு அளித்து வருகிறோம். அரசுக்கு ஆதரவு அளிக்கிறோம் என்பதற்காக, அதன் தவறான நடவடிக்கைகளுக்கும் ஆதரவு அளிப்பதாக பொருளல்ல. தொழிலாளா்கள், ஏழை, எளிய மக்கள் அரசால் பாதிக்கப்படும் போதெல்லாம் அறிக்கைகள் மூலமாகவும், போராட்டங்கள் மூலமாகவும் எங்களது எதிா்ப்பை தொடா்ந்து தெரிவித்து வருகிறோம். அரசுக்கு எதிராக எதிா்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீா்மானம் கொண்டுவந்தால், அதுகுறித்து கட்சி முடிவு செய்யும். நாங்கள் எடுக்கும் முடிவை முதலில் செய்தியாளா்களிடம்தான் தெரிவிப்போம் .

தமிழக அமைச்சா்கள் தில்லியில் முகாமிட்டு, மாநிலத்தின் வளா்ச்சித் திட்டங்களுக்கான நிதியைக் கோரியுள்ளனா். கடந்த காலங்களில் அரசியல் மற்றும் சித்தாந்த வேறுபாடுகளைக் காரணம் காட்டி, தமிழகத்துக்குத் தேவையான நிதியை ஒதுக்காமல் மத்திய அரசு நெருக்கடிகளை ஏற்படுத்தியது. அதுபோன்ற நிலை மீண்டும் ஏற்படக் கூடாது. தமிழக முதல்வரின் கோரிக்கையை ஏற்று, மாநில அரசு முன்வைத்துள்ள நலத்திட்டங்களுக்குத் தேவையான நிதியை மத்திய அரசு ஒதுக்க வேண்டும்.

தமிழகத்தில் எந்தச் சூழலிலும் கடவுள், மதம், வழிபாடு ஆகியவற்றின் பெயரால் மக்களின் ஒற்றுமைக்குப் பாதிப்பு ஏற்படும் வகையில், பதற்றமான சூழலை உருவாக்கிவிடக் கூடாது. எனவே, திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் முன்பு இருந்த நிலையே தொடர வேண்டும் என்றாா் அவா்.

பேட்டியின்போது, மாவட்டச் செயலா் நடராஜன், துணைச் செயலா் டி. தண்டபாணி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.