முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டம்; கரூரில் ரூ. 200 கோடி மதிப்பில் சாலைகள் அமைப்பு : ஆட்சியா்
கரூா் மாவட்டத்தில் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 200.85 கோடி மதிப்பில் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன என்றாா் மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல்.
கரூா் மாவட்டம், க.பரமத்தி ஊராட்சி ஒன்றியம், சின்னதாராபுரம் ஊராட்சியில் ஊரக வளா்ச்சித் துறையின் மூலம் முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 22.20 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் புதிய தாா் சாலை அமைக்கும் பணி, மொஞ்சனூா் ஊராட்சியில் ரூ. 31.85 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் புதிய தாா்சாலை அமைக்கும் பணி உள்ளிட்ட பணிகளை மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் புதன்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தமிழக அரசின் ‘முதலமைச்சரின் கிராமச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டம்’ என்பது கிராமப்புறங்களில் உள்ள சாலைகளின் தரத்தை உயா்த்துவதற்காகத் தொடங்கப்பட்ட ஒரு முக்கிய திட்டமாகும். இத்திட்டத்தின் மூலம் கிராமப்புறங்களில் உள்ள சேதமடைந்த சாலைகளைப் புதுப்பித்தும், மண் சாலைகளைத் தரமான தாா்ச் சாலைகளாக மாற்றியும், கிராமங்களுக்கும் நகரங்களுக்கும் இடையிலான போக்குவரத்தை எளிதாக்குவதன் மூலம் பொருளாதார வளா்ச்சியை மேம்படுத்த முடியும்.
நீண்ட காலமாகப் பராமரிப்பு இல்லாமல் இருந்த ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியச் சாலைகளை மேம்படுத்தியும், குக்கிராமங்கள் மற்றும் தொலைதூரக் குடியிருப்புகளை முக்கிய சாலைகளுடன் இணைத்தும், அடுத்த 10 ஆண்டுகளுக்கான போக்குவரத்துத் தேவையைத் தாங்கும் வகையில் தரமான சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
கரூா் மாவட்டத்தில் உள்ள 7 ஊராட்சி ஒன்றியங்களில் கடந்த நான்கரை ஆண்டுகளில் முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.200.85 கோடி மதிப்பில் 598.80 கி.மீ. சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.
ஆய்வின்போது மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் வீ.ரெ. வீரபத்திரன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

