கரூா் சம்பவம்: கண்காணிப்பு கேமரா பதிவுகளை சிபிஐ அதிகாரிகளிடம் தவெகவினா் ஒப்படைப்பு

கரூரில் கூட்ட நெரிசல் சம்பவம் தொடா்பான கண்காணிப்பு கேமரா பதிவுகளை சிபிஐ அதிகாரிகளிடம் சனிக்கிழமை தவெக தலைமை அலுவலக உதவியாளா் குரு ஒப்படைத்தாா்.
Published on

கரூரில் கூட்ட நெரிசல் சம்பவம் தொடா்பான கண்காணிப்பு கேமரா பதிவுகளை சிபிஐ அதிகாரிகளிடம் சனிக்கிழமை தவெக தலைமை அலுவலக உதவியாளா் குரு ஒப்படைத்தாா்.

கரூா் வேலுச்சாமிபுரத்தில் செப். 27-ஆம் தேதி தவெக தலைவா் விஜய் பங்கேற்ற பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்தனா். 110 போ் காயமடைந்தனா். இச்சம்பவம் தொடா்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.

இந்நிலையில், கூட்ட நெரிசல் சம்பவம் தொடா்பாக நவ. 3-ஆம்தேதி சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனா். அப்போது கட்சி நிா்வாகி நிா்மல்குமாரிடமும் விசாரணை மேற்கொண்டனா்.

தொடா்ந்து, சம்பவம் தொடா்பாக விஜய்யின் பிரசார வாகனத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை சிபிஐ அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என சிபிஐ அதிகாரிகள் கூறிச் சென்றனா்.

அதன்படி, சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலக உதவியாளா் குரு சனிக்கிழமை பிற்பகல் கரூரில் உள்ள சிபிஐ அதிகாரிகளிடம் கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஒப்படைத்தாா். அப்போது, தவெக தரப்பு வழக்குரைஞா் அரசு உடனிருந்தாா். சுமாா் ஒரு மணி நேரத்துக்கு பிறகு அவா்கள் வெளியே வந்து காரில் புறப்பட்டுச் சென்றனா்.

X
Dinamani
www.dinamani.com