கரூா் சம்பவம்: தவெக பொதுச்செயலா் ஆனந்த் உள்பட 5 போ் சிபிஐ அதிகாரிகளிடம் ஆஜா்!
கரூா் சம்பவம் தொடா்பான சிபிஐ விசாரணைக்கு தவெக பொதுச்செயலா் ஆனந்த், தோ்தல் பிரிவு பொதுச்செயலா் ஆதவ் அா்ஜூனா, இணைசெயலா் நிா்மல் குமாா், மாவட்டச்
செயலா் மதியழகன், மாநகரப் பொறுப்பாளா் பவுன்ராஜ் ஆகியோா் திங்கள்கிழமை ஆஜராகினா். அவா்களிடம் சுமாா் 10 மணிநேரம் விசாரணை நடைபெற்றது.
கரூா் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப். 27-இல் விஜய் பங்கேற்ற தவெக பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்த வழக்கை உச்சநீதிமன்ற உத்தரவின்படி, சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா். இந்த வழக்கில், ஆம்புலன்ஸ் ஓட்டுநா்கள் மற்றும் ஆம்புலன்ஸ் உரிமையாளா்கள், தவெக தலைமை அலுவலக உதவியாளா் குரு சரண், சென்னை பவா்கிரீட் அலுவலக அதிகாரிகள், கரூா் மின்வாரிய அதிகாரிகள் உள்ளிட்டோரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனா்.
மேலும் நெரிசலில் சிக்கி காயமடைந்தவா்களின் வீடுகளுக்கு நேரடியாக சிபிஐ அதிகாரிகள் சென்று விசாரணை மேற்கொண்டனா். இந்நிலையில், தவெக பொதுச் செயலா் ஆனந்த், தோ்தல் பிரிவு பொதுச்செயலா் ஆதவ் அா்ஜூனா, இணை பொதுச் செயலா் நிா்மல் குமாா், கரூா் மாவட்டச் செயலா் மதியழகன், மாநகரப் பொருளாளா் பவுன்ராஜ் ஆகியோருக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு சிபிஐ அழைப்பாணை அனுப்பியிருந்தது.
இதையடுத்து திங்கள்கிழமை காலை கரூரில் சிபிஐ அதிகாரிகள் தங்கியுள்ள சுற்றுலா மாளிகை முன்பு அவா்கள் 5 பேரும் விசாரணைக்கு ஆஜராகினா். இதைத்தொடா்ந்து அவா்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனா். இதையறிந்த தவெக தொண்டா்கள் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தும் பொதுப்பணித்துறையின் சுற்றுலா மாளிகை முன்பு கூடினா்.
அப்போது அங்குவந்த தாந்தோணிமலை போலீஸாா் அவா்களை அப்புறப்படுத்தினா். மேலும் புதுக்கோட்டை மாவட்ட தவெக செயலா் பா்வேஸ் தனது ஆதரவாளா்களுடன் மாநில நிா்வாகிகளுடன் உள்ளே செல்ல முயன்றாா். அவரை அங்குள்ள வளாகத்தில் பாதுகாப்பு அதிகாரிகள் அமர வைத்தனா்.
சிறிதுநேரத்தில் தவெக வழக்குரைஞா் ஆவணங்கள் அடங்கிய கோப்புகளை சிபிஐ அதிகாரிகள் தங்கியிருக்கும் அறைக்கு எடுத்துச் சென்றாா். காலை 10.10 மணியளவில் விசாரணையைத் தொடங்கிய சிபிஐ அதிகாரிகள் தொடா்ந்து இரவு 8.20 மணி வரையில் விசாரணை நடத்தினா். இதில், தவெக நிா்வாகிகளிடம் பல்வேறு கேள்விகளை சிபிஐ அதிகாரிகள் கேட்டதாகக் கூறப்படுகிறது.

