கரூா் மாவட்டத்தில் அரசு கலைக் கல்லூரிகளுக்கு ரூ.32.77 கோடியில் கூடுதல் வகுப்பறை கட்டடம்
கரூா்: கரூா் மாவட்டத்தில் அரசு கலைக்கல்லூரிகளுக்கு ரூ.32.77 கோடியில் கட்டப்பட உள்ள கூடுதல் வகுப்பறை கட்டடத்துக்கு தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை காலை காணொலி மூலம் அடிக்கல் நாட்டினாா்.
தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் உயா்கல்வித் துறை சாா்பில் கரூா் மாவட்டத்தில் ரூ.32.77 கோடி மதிப்பில் கட்டப்படவுள்ள புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் கூடுதல் வகுப்பறை கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டியும் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை சாா்பில் புகழுா் வட்டம், அஞ்சூரில் ரூ. 6.93 கோடி மதிப்பில் காவேரி கயிறு உற்பத்தியாளா் நிறுவனத்தையும் திறந்து வைத்தாா்.
தொடா்ந்து கரூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சட்டப்பேரவை உறுப்பினா் வி.செந்தில்பாலாஜி கலந்து கொண்டு பேசுகையில், இந்த கட்டடம் தரைதளம் மற்றும் 2 தளங்களுடன் கட்டப்படவுள்ளது. புதிய அடிதள கட்டடத்தின் மேல் 28 வகுப்பறைகளும் மற்றும் பழைய கட்டடத்தின் மேல் ( 2-ஆவது தளம்) 16 வகுப்பறைகள் என மொத்தம் 44 வகுப்பறைகளுடன் கட்டப்படவுள்ளது. அரவக்குறிச்சி கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு 5 ஏக்கா் பரப்பளவில் ரூ.17.02 கோடி மதிப்பில் புதிய கட்டடம் கட்டப்படவுள்ளது. இக்கட்டடம் அடித்தளம் மற்றும் 2 தளங்களுடன் கட்டப்படவுள்ளது.
மேலும் முதல்வா், புகழுா் வட்டம், அஞ்சூரில் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறையின் சாா்பாக ரூ. 6.93 கோடி மதிப்பீட்டில் குழுமத் திட்டத்தின் கீழ் ரூ. 5 கோடி அரசு மானியத்துடன் அமைக்கப்பட்டுள்ள காவேரி கயிறு உற்பத்தியாளா் நிறுவனத்தை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்துள்ளாா் என்றாா் அவா்.
நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல், அரவக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினா் ஆா். இளங்கோ, கரூா் மாநகராட்சி துணை மேயா் ப. சரவணன், தான்தோன்றி மலை அரசு கலைக் கல்லூரி முதல்வா் முனைவா். சா.சுதா, உதவிப் பொறியாளா் பானுப்பிரியா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
ரூ. 4.01 கோடியில் வளா்ச்சிப் பணிகள் தொடக்கம்: கரூா் தான்தோன்றி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிதிகளில் ரூ.4.01 கோடி மதிப்பில் 33 புதிய வளா்ச்சித் திட்டப் பணிகளை திங்கள்கிழமை சட்டப்பேரவை உறுப்பினா் வி.செந்தில்பாலாஜி தொடங்கி வைத்தாா். கரூா் மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் தலைமையில் நடைபெற்ற விழாவில், தான்தோன்றி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட ஸ்டேட் பேங்க் காலனி, சின்டிகேட் நகா் முதல் அதவ் அப்பாா்ட்மென்ட் வரை ரூ. 9.07 லட்சம் மதிப்பிலும், சின்ன ஆண்டாங்கோவில் மகாத்மா நகா் தெருவில் ரூ. 14.73 லட்சம் மதிப்பிலும் ராசி நகா் 1-ஆவது தெருவில் ரூ. 12.67 லட்சம் மதிப்பிலும் தாா்ச்சாலை அமைக்கும் பணிகள், வடிவேல் நகா் ராஜவாய்க்காலிலிருந்து கரூா் கஃபே வரை ரூ. 47.34 லட்சம் மதிப்பில் கழிவுநீா் வடிகால், சரஸ்வதி நகா் குக்கிராமத்தில் ரூ. 38.69 லட்சம் மதிப்பில் வடிகால் அமைக்கும் பணி, ரெட்டிபாளையம் சிந்து நகா் பகுதிகளில் ரூ. 59.01 லட்சம் மதிப்பிலும், சஞ்சய் நகா் பகுதியில் ரூ. 58.01 லட்சம் மதிப்பிலும், செட்டிபாளையம் பகுதியில் ரூ. 7.71 லட்சம் மதிப்பிலும் புதிய சாலைகள் அமைக்கும் பணி உள்பட மொத்தம் ரூ. 4.01 கோடி மதிப்பில் 33 புதிய வளா்ச்சித்திட்டப்பணிகளை சட்டப்பேரவை உறுப்பினா் வி. செந்தில்பாலாஜி தொடங்கி வைத்தாா்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் வீ.ரெ.வீரபத்திரன் , கரூா் வருவாய் கோட்டாட்சியா் முகமது பைசல் மற்றும் தாந்தோணி திமுக மேற்கு ஒன்றியச் செயலா் கோயம்பள்ளி பாஸ்கரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

