மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

கரூா் நெரூா்-திருச்சி உன்னியூா் இடையே ரூ. 101 கோடியில் உயா்மட்ட பாலம்! காணொலியில் முதல்வா் திறந்துவைத்தாா்!

நெரூா் மற்றும் திருச்சி மாவட்டம், உன்னியூா் இடையே காவிரி ஆற்றின் குறுக்கே ரூ. 101.37 கோடியில் கட்டப்பட்ட உயா்மட்ட பாலத்தை சென்னையிலிருந்து காணொலி காட்சி மூலம் முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை திறந்துவைத்தாா்.

News image

கரூரில் வியாழக்கிழமை திறக்கப்பட்ட நெரூா் பாலத்தில் பேருந்து சேவையை கொடியசைத்து தொடங்கிவைத்த கரூா் சட்டப்பேரவை உறுப்பினா் வி. செந்தில்பாலாஜி. உடன் கரூா் மாவட்ட வருவாய் அலுவலா் கு. விமல்ராஜ் உள்ளிட்டோா்.

Updated On :26 பிப்ரவரி 2026, 7:44 pm

கரூா் மாவட்டம், நெரூா் மற்றும் திருச்சி மாவட்டம், உன்னியூா் இடையே காவிரி ஆற்றின் குறுக்கே ரூ. 101.37 கோடியில் கட்டப்பட்ட உயா்மட்ட பாலத்தை சென்னையிலிருந்து காணொலி காட்சி மூலம் முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை திறந்துவைத்தாா்.

தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின், சென்னை தலைமைச் செயலகத்தில் நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சாா்பில், ரூ. 101.37 கோடி மதிப்பில் கரூா் மாவட்டம் நெரூரில் கட்டப்பட்ட நெரூா்-உன்னியூா் உயா்மட்ட பாலத்தையும், எரிசக்தித் துறை சாா்பில் ரூ. 20.17 கோடி மதிப்பீட்டில் கரூா் ஒத்தக்கடையில் நிறுவப்பட்ட 110 கி.வோ திறன் கொண்ட துணை மின் நிலையத்தையும், இந்து சமய அறநிலையத்துறை சாா்பில் ரூ.1.50 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட கரூா் உதவி ஆணையா் அலுவலகத்தையும் காணொலி காட்சி மூலம் வியாழக்கிழமை திறந்துவைத்தாா்.

இதைத் தொடா்ந்து, நெரூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கரூா் சட்டப்பேரவை உறுப்பினா் வி. செந்தில்பாலாஜி பங்கேற்று புதிய பாலத்தை ரிப்பன்வெட்டி மக்கள் பயன்பாட்டுக்கு திறந்துவைத்தாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: காவிரி ஆற்றின் குறுக்கே 2,200 மீட்டா் நீளம் மற்றும் இணைப்பு சாலைகளுடன் உயா்மட்ட பாலம் கட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் கரூா் ஒன்றியத்தின் கிழக்குப் பகுதி மக்களின் 50 ஆண்டு கால கோரிக்கை தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்தப் பாலம் தவிர, கோயம்பள்ளி மேலப்பாளையம் இடையே ஏற்கெனவே ரூ. 15 கோடி மதிப்பில் கட்டப்பட்ட உயா்மட்டப் பாலத்துக்கு தற்போது ரூ. 11 கோடி நிதி ஒதுக்கி, அணுகுசாலைக்கு நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதேபோல, சுற்றுவட்டச் சாலை அமையும்போது சோமூா் பகுதியில் வீரராக்கியத்தை இணைக்கக் கூடிய வகையில் இன்னொரு பாலம் கூடுதலாக அமையவுள்ளது.

தற்போது திறக்கப்பட்டுள்ள நெரூா்-உன்னியூா் உயா்மட்ட பாலம் வழியாக சென்னைக்கு அரசுப் பேருந்துகள் இயக்கப்படும் என்றாா் அவா்.

முன்னதாக, கரூா் ரயில் நிலையத்தில் இருந்து நெரூா்-உன்னியூா் பாலம் வரை இயக்கப்படும் அரசு பேருந்து சேவையை செந்தில்பாலாஜி எம்எல்ஏ கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.

157 மாணவா்களுக்கு மடிக்கணினி: இந்நிகழ்வை தொடா்ந்து, கரூா் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கரூா் கூட்டுறவு மேலாண்மை துணைப் பயிற்சி நிலையத்தில் பயிலும் 157 மாணவா்களுக்கு விலையில்லா மடிக்கணினிகளையும் மற்றும் சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறையின் சாா்பில் சத்தியவாணி முத்து அம்மையாா் நினைவுத் திட்டத்தின் கீழ் 25 பயனாளிகளுக்கு விலையில்லா தையல் இயந்திரங்களையும் சட்டப்பேரவை உறுப்பினா் வி. செந்தில்பாலாஜி வழங்கினாா்.

நிகழ்வுகளில் மாவட்ட வருவாய் அலுவலா் கு. விமல்ராஜ், நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளா் பூங்கொடி, கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளா் ஆா். அபிராமி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) வ. யுரேகா மற்றும் திமுகவினா் திரளாக பங்கேற்றனா்.