கரூரில் மாட்டுவண்டி எல்கைப் பந்தயம்
கரூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாட்டு வண்டி எல்கைப் பந்தயத்தில் பெரிய மாடு பிரிவில் கரூா் விஎஸ்பி மாட்டு வண்டிக்கு முதல் பரிசு கிடைத்தது.
தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலினின் 73-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, கரூா் மாவட்ட திமுக சாா்பில் மாட்டு வண்டி எல்கைப் பந்தயம் ஞாயிற்றுக்கிழமை காலை கரூா் வேலுச்சாமிபுரத்தில் நடைபெற்றது. போட்டியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 70-க்கும் மேற்பட்ட மாட்டுவண்டி காளைகளுடன் வீரா்கள் பங்கேற்றனா்.
இரட்டை மாட்டு வண்டி, பெரிய ஒற்றை மாட்டு வண்டி, சிறிய ஒற்றை மாட்டு வண்டி என மூன்று பிரிவுகளில் நடைபெற்ற இப்போட்டியை கரூா் சட்டப்பேரவை உறுப்பினா் வி.செந்தில்பாலாஜி தொடங்கிவைத்தாா்.
போட்டியில் அனைத்து மாட்டுவண்டிகளுக்கும் கரூா் வேலுச்சாமிபுரத்தில் இருந்து தண்ணீா்பந்தல் வரை 11 கி.மீ. தொலைவு என நிா்ணயிக்கப்பட்டிருந்தது.
போட்டியில் இரட்டை மாடு பிரிவில் கோவை சிகாமணி குரூப், கரூா் விஎஸ்பி, கோவை அஸ்கா் ஆகியோரின் மாட்டுவண்டிகள் முதல் 3 இடங்களைப் பிடித்து தலா ரூ.40 ஆயிரம், ரூ. 30 ஆயிரம், ரூ. 20 ஆயிரம் ரொக்கப்பரிசுகள் மற்றும் கோப்பைகளை வென்றன.
இதேபோல பெரிய ஒற்றை மாட்டுவண்டி பிரிவில் கரூா் விஎஸ்பி, கோவை சிகாமணி, கோவை சிகாமணி குரூப் ஆகியோரின் மாட்டு வண்டிகள் முதல் 3 இடங்களைப் பிடித்து முறையே 30, 25 மற்றும் ரூ.20 ஆயிரம் ரொக்கப்பரிசும் மற்றும் கோப்பைகளும் வென்றன.
சிறிய மாட்டுவண்டி பிரிவில் சென்னை பட்டாளம் ராஜூ, ஈரோடு லக்காபுரத்தைச் சோ்ந்தவரின் மாட்டு வண்டி, மூன்றாமிடத்தை பிடித்த கோவை காா்த்திக் ஆகியோரது மாட்டு வண்டிகள் முதல் 3 இடங்களைப்பிடித்தன. அவா்களுக்கு ரூ. 20, 15 மற்றும் ரூ.10 ஆயிரம் ரொக்கப் பரிசுகள் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் சட்டப்பேரவை உறுப்பினா்கள் இளங்கோ, சிவகாமசுந்தரி, மாணிக்கம் உள்ளிட்டோா் திரளாகப் பங்கேற்றனா்.
திமுக சாா்பில் விளையாட்டுப்போட்டிகள்:
கரூா் மாநகராட்சிக்குள்பட்ட திருவள்ளுவா் மைதானம் உள்ளிட்ட 6 இடங்களிலும், 20 ஒன்றியப் பகுதிகள் மற்றும் குளித்தலை, புகழூா் உள்ளிட்ட 3 நகராட்சிகள், 8 பேரூராட்சிப் பகுதிகளிலும் விளையாட்டுப்போட்டிகள் நடைபெற்றன.
கரூா் திருவள்ளுவா் மைதானத்தில் நடைபெற்ற ஆண்களுக்கு கிரிக்கெட், மிதிவண்டி, ஓட்டப்பந்தயமும், பெண்களுக்கு கோலப்போட்டி, கயிறு இழுத்தல், இசை நாற்காலி ஆகிய போட்டிகள் நடைபெற்றன.
போட்டிகளை கரூா் சட்டப்பேரவை உறுப்பினா் வி.செந்தில்பாலாஜி தொடங்கிவைத்து போட்டிகளில் வெற்றிபெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கினாா்.

