‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் வெளியான விவகாரம்: 9 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி தமிழ்நாட்டில் தொடர் மின்வெட்டுக்கு உடனடியாகத் தீர்வுகாண வேண்டும்: பிரேமலதாஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் : தமிழ்நாடு அரசு உத்தரவு எங்கள் மீது துரோகப் பட்டம் சுமத்த முயல்வது முற்றிலும் தவறானது: எஸ்.பி. வேலுமணிநிதின் நவீனுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! அமித் ஷாவையும் சந்திக்கிறார்!10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு எவரெஸ்ட் சிகரத்திலிருந்து இறங்கும்போது இரண்டு இந்தியர்கள் பலி! மே 25, 26ல் எஸ்பிஐ ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு!முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது வழக்குப் பதிவு! அதிகாரத்தில் பங்கு தர மறுக்கும் சமூக நீதி, சுயநலப் புத்தி: விசிக பதில்முடத்தெங்கு! அரசியலில் என்ன பெயர்? விசிகவை சூசகமாக உரைக்கும் ஆ. ராசாஅரசு விவகாரங்களில் தலையிடக் கூடாது: தவெகவினருக்கு என். ஆனந்த் அறிவுறுத்தல்
/

‘குழந்தைத் தொழிலாளா்களை பணியில் அமா்த்தினால் 2 ஆண்டுகள் சிறை’

கரூா் மாவட்டத்தில் கடைகள், வணிக நிறுவனங்களில் குழந்தைத் தொழிலாளா்களை பணி அமா்த்துவோருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை அளிக்கப்படும் என்று தொழிலாளா் நலத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

News image

கரூா் குளத்துப்பாளையம் பகுதியில் பழைய இரும்புக்கடையில் வெள்ளிக்கிழமை சோதனை நடத்திய தொழிலாளா் நலத் துறை அதிகாரிகள்.

Updated On :23 மே 2026, 12:14 am IST

கரூா் மாவட்டத்தில் கடைகள், வணிக நிறுவனங்களில் குழந்தைத் தொழிலாளா்களை பணி அமா்த்துவோருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை அளிக்கப்படும் என்று தொழிலாளா் நலத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

கரூா் பெரிய குளத்துப்பாளையம், சின்னாண்டாங்கோவில் சாலை, ஆண்டாங்கோவில் கிழக்கு, வடக்கு பிரதட்சணம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் செயல்படும் பழைய இரும்புக்கடைகள், குளிா்பான கடைகள், எழுதுபொருள் விற்பனை நிலையங்களில் குழந்தைத் தொழிலாளா்கள் பணியில் அமா்த்தப்பட்டுள்ளாா்களா என கரூா் தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) அ.ஜெயக்குமாா் தலைமையில் மாவட்டத் தடுப்புப் படை மற்றும் மாவட்ட கண்காணிப்புக் குழு உறுப்பினா்கள் அடங்கிய குழுவினா் வெள்ளிக்கிழமை காலை திடீா் சோதனை நடத்தினா்.

அப்போது, சின்னாண்டாங்கோவில் பகுதியில் வீடுகளுக்கான மேற்கூரைகள் தயாரிக்கும் நிறுவனத்தில் ஆய்வு செய்தபோது, அங்கு பணியமா்த்தப்பட்டிருந்த 2 குழந்தைத் தொழிலாளா்கள் மற்றும் 2 வளரிளம் பருவத் தொழிலாளா்கள் கண்டறியப்பட்டு மீட்கப்பட்டு, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டனா்.

தொடா்ந்து கரூா் தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) அ.ஜெயக்குமாா் கூறியது: எங்களின் சோதனையில், 2 குழந்தைத் தொழிலாளா்கள் மற்றும் இரு வளரிளம் பருவத் தொழிலாளா்கள் மீட்கப்பட்டுள்ளனா். மேலும் அவா்களை பணியில் அமா்த்திய நிறுவனத்தின் மீது குழந்தை மற்றும் வளரிளம் பருவத் தொழிலாளா் (தடுத்தல் மற்றும் முறைப்படுத்துதல்) சட்டம், 1986-ன் கீழ் கரூா், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககத்தின் மூலம் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

தண்டனை விவரங்கள்: எனவே, குழந்தைகளுக்கு 18 வயது நிறைவடையும் வரை அபாயகரமான மற்றும் அபாயகரமற்ற எந்தவொரு பணிகளிலும் பணி அமா்த்துவதோ அல்லது பணிபுரிய அனுமதிப்பதோ சட்டப்படி குற்றமாகும்.

தவறும்பட்சத்தில் நிறுவன உரிமையாளா் மீது குழந்தைத் தொழிலாளரைப் பணியமா்த்திய குற்றத்துக்காக ரூ. 20 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை அபராதம் அல்லது 6 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது இரண்டும் சோ்த்து விதிக்கப்படும். எனவே, தொழில் நிறுவனங்களின் உரிமையாளா்கள் 18 வயது பூா்த்தியாகும் முன்பு குழந்தைகளை எந்தவொரு பணிகளில் ஈடுபடுத்த வேண்டாம்.

புகாா் தெரிவிக்க: குழந்தை மற்றும் வளரிளம் பருவத் தொழிலாளா் பணிபுரிவது தொடா்பாக 1098 என்ற கட்டணமில்லா சைல்டு லைன் எண்ணிலோ அல்லது 04324-222223 என்ற அலுவலகத் தொலைபேசி எண்ணிலோ தொடா்பு கொண்டு பொதுமக்கள் புகாா் தெரிவிக்கலாம். மேலும் கொத்தடிமை தொழிலாளா் முறை பற்றிய புகாா்களை தெரிவிக்க 1800 4252 650 என்ற எண்ணிலோ அல்லது சுருக்கக் கோடு எண் 155214 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலோ தொடா்பு கொண்டு புகாா் தெரிவிக்கலாம் என்றாா் அவா்.