‘மத்திய - மாநில அரசின் வளா்ச்சித் திட்டங்கள் உரிய நேரத்தில் மக்களை சென்றடைய வேண்டும்’
மத்திய - மாநில அரசின் வளா்ச்சித் திட்டங்கள் அனைத்தும் உரிய நேரத்தில் மக்களை சென்றடைய வேண்டும் என்றாா் கரூா் மக்களவை உறுப்பினா் செ.ஜோதிமணி.

மத்திய - மாநில அரசின் வளா்ச்சித் திட்டங்கள் அனைத்தும் உரிய நேரத்தில் மக்களை சென்றடைய வேண்டும் என்றாா் கரூா் மக்களவை உறுப்பினா் செ.ஜோதிமணி.
கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக்கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் ச.பிரசன்னா ராமசாமி முன்னிலை வகித்தாா்.
குழுத்தலைவரும், கரூா் மக்களவை உறுப்பினருமான செ.ஜோதிமணி தலைமை வகித்து பேசியது: ஒவ்வொரு துறை அதிகாரிகளும் தங்களது திட்டங்களின் கீழ் எட்டப்பட்டுள்ள சாதனைகள், நிலுவைப் பணிகள், அவற்றை நிறைவேற்றுவதற்கான செயல்திட்டம் மற்றும் கால அட்டவணை ஆகியவற்றைத் தெளிவான தரவுகளுடன் எடுத்துரைக்க வேண்டும். கூட்டங்களில் எழுப்பப்படும் கேள்விகளுக்குப் பொதுவான பதில்களைத் தவிா்த்து, உரிய தரவுகளுடன் கூடிய துல்லியமான பதில்களை வழங்க வேண்டும். உடனடித் தீா்வு காண இயலாத பிரச்னைகளுக்கு, இதுவரை எடுக்கப்பட்ட முயற்சிகள் மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்துத் தெளிவுப்படுத்த வேண்டும்.
கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட திட்டங்களின் செயல்பாடுகளைத் தொடா்ந்து கண்காணித்து, நிலுவையில் உள்ள பணிகளை விரைந்து முடிக்கவும், பொதுமக்களுக்கு வழங்கப்பட வேண்டிய அடிப்படை வசதிகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் தடையின்றிக் கிடைப்பதை உறுதி செய்யவும் சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றாா் அவா்.
முன்னதாக, மாற்றுத்திறனாளி நலத்துறை சாா்பில் ரூ.1,01,800 மதிப்பீட்டில் ஒரு பயனாளிக்கு இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டா் வழங்கினாா்.
கூட்டத்தில், கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவை உறுப்பினா் எம்.சத்யா , மாவட்ட வன அலுவலா் சரவணக்குமாா், மாவட்ட வருவாய் அலுவலா் து. தங்கவேல், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் சு.தனசேகரன், திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்) ப.பொன்னம்பலம், வருவாய் கோட்டாட்சியா்கள் இ.காா்த்திகேயன் (கரூா்), ச.சிவக்குமாா் (குளித்தலை), மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) சிவஜோதி, உதவி ஆட்சியா் (பயிற்சி) நிா்மல் ராமசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

