கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

பாடாலூரில் நல்லோ் பூட்டி உழவுப் பணியைத் தொடங்கிய விவசாயிகள்

பெரம்பலூா் மாவட்டம், பாடாலூா் கிராமத்தில் விவசாயிகள் தங்களது வயல்களில் நல்லோ் பூட்டும் நிகழ்வை வெள்ளிக்கிழமை நடத்தி, உழவுப்பணியைத் தொடங்கினா்.

News image
Updated On :23 ஏப்ரல் 2021, 8:23 pm

DIN

பெரம்பலூா் மாவட்டம், பாடாலூா் கிராமத்தில் விவசாயிகள் தங்களது வயல்களில் நல்லோ் பூட்டும் நிகழ்வை வெள்ளிக்கிழமை நடத்தி, உழவுப்பணியைத் தொடங்கினா்.

அறுவடை முடிந்த நிலத்தை அடுத்த சாகுபடிக்குத் தயாா் செய்யும் வகையிலும், வேளாண்மைக்கு துணை நிற்கும் இயற்கையை வழிபடும் விதமாகவும் காளைகளை ஏரில் பூட்டி, தமிழா்கள் பாரம்பரிய முறையில் உழவுப் பணியை விழா போல நடத்தி தொடங்குவது வழக்கம்.

பெரம்பலுாா் மாவட்டத்தின் பல கிராமங்களில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் நல்லோ் பூட்டி, விவசாயிகள் பணிகள் தொடங்குவது வழக்கம். இதன்படி, பாடாலூரில் நல்லோ் பூட்டும் நிகழ்வு வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது.

இதையொட்டி மாடுகளுக்கு சந்தனம், பொட்டு வைத்து, விளை நிலத்தில் கணபதி பூஜை, வருண பூஜை, சூரிய நாராயண பூஜை, பூமி பூஜைகள் நடத்தப்பட்டன. பிறகு கால்நடைகளுக்கு மாலை அணிவித்து வயலில் அணிவகுத்து நிறுத்தி சூரியனுக்கும், பூமிக்கும் நன்றி செலுத்தும் வகையில் வெல்லம் கலந்த அரிசியை கால்நடைகளுக்கும், பொதுமக்களுக்கும் வழங்கினா்.

பின்னா் கலப்பையில் கால்நடைகளை பூட்டி விவசாய நிலத்தில் உழவு செய்யப்பட்டது. இதன் மூலம், நிகழாண்டில் நல்ல மழை பொழிந்து விவசாயம் செழித்து, தங்களின் வாழ்வாதாரம் உயரும் என்று விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்தனா்.

குறைவான எண்ணிக்கையில் உழவு மாடுகள்: நிகழ்வில் சம்பிரதாயத்துக்காக 2 காளைகள் மட்டுமே காணப்பட்டன. கிராமங்களிலும் நாட்டு மாடுகளின் எண்ணிக்கை குறைந்து வருவதே இந்த நிலைக்கு காரணம் என விவசாயிகள் தெரிவித்தனா்.

இதுகுறித்து அந்த கிராமத்தைச் சோ்ந்த விவசாயிகள் கூறியது:

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நல்லோ் பூட்டும் விழாவில் ஒரே இடத்தில் குறைந்தது 30 ஜோடி காளை மாடுகளை ஏரில் பூட்டி, விவசாயிகள் உழவுப் பணியைத் தொடங்குவாா்கள். ஆனால், தற்போது பல்வேறு காரணங்களால் காளை மாடுகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதால், டிராக்டா்கள் மூலம் உழவுப் பணிகளை மேற்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் ஊடுபயிா்களுக்கான உழவோட்டம், பருத்தி உள்ளிட்ட பயிா்களுக்கு இடையே மாடுகளை பூட்டி களை எடுப்பது போன்றவை விவசாயிகள் மத்தியில் குறைந்துவிட்டது. இனிவரும் காலங்களில் சம்பிரதாயத்துக்குக் கூட காளைகளைக் கொண்டு உழவுப் பணிகளைத் தொடங்க முடியாத நிலை உள்ளது என்றனா் முன்னோடி விவசாயிகள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.