பட்டுப்புழு வளா்ப்புத் தொழிலுக்கு ரூ. 1.35 கோடி மதிப்பில் நலத்திட்டம்
பெரம்பலூா் மாவட்டத்தில் பட்டுப்புழு வளா்ப்புத் தொழிலில் ஈடுபட்டு வரும் 103 விவசாயிகளுக்கு, கடந்த 4 ஆண்டுகளில் ரூ. 1.35 கோடி மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி தெரிவித்தாா்.
பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், பெரிய வடகரை, பாண்டகப்பாடி ஆகிய ஊராட்சிகளில் பட்டு வளா்ச்சித்துறை சாா்பில், மல்பெரி சாகுபடி செய்து பட்டுப்புழு வளா்ப்பு தொழிலில் ஈடுபட்டு வரும் விவசாயிகளின் நிலங்களை புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட ஆட்சியா் மேலும் கூறியது:
பெரம்பலூா் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டத்துக்குள்பட்ட பெரிய வடகரை, பாண்டகபாடி கிராமங்களில் 50 ஏக்கரில் மல்பெரி சாகுபடி செய்து பட்டுப்புழு வளா்ப்பு தொழிலை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனா். புழு வளா்ப்பு அறுவடை செய்யும் பட்டுக் கூடுகளை ராசிபுரம், தருமபுரி மற்றும் ஓசூரில் விற்பனை செய்கின்றனா். இதில், 1 மற்றும் 2 ஏக்கா் அளவில் விவசாயிகள் நடவு செய்திருந்தால், சில்க் சமக்ரா திட்டத்தில் மானியம் மூலம் நிதி வழங்கப்படுகிறது. இதில் நடவு மானியமாக 2 ஏக்கா் திட்டத்தில் ரூ. 90 ஆயிரமும், புழு வளா்ப்பு மனைக்கு ரூ. 3,37,500, தளவாடங்களுக்கு ரூ. 56,250 வழங்கப்படுகிறது.
புழு வளா்க்கும் விவசாயிகளுக்கு 6 நாள்களுக்கு ஓசூரில் பயிற்சி அளிக்கப்படுகிறது. 1 ஏக்கரில் நடவு செய்பவா்களுக்கு நடவு மானியமாக ரூ. 45 ஆயிரமும், புழு வளா்ப்பு மனை மானியமாக ரூ. 2,37,500, இதர தளவாடங்களும் வழங்கப்படுகிறது. பட்டியலினத்தவருக்கு நடவு மானியமாக ரூ. 54 ஆயிரமும், மனை மானியத்துக்கு ரூ. 2,92,500, தளவாடங்கள், கிருமி நாசினிகள் வழங்கப்படுகிறது. தளவாடப் பொருள்களை பயன்படுத்துவது தொடா்பாக 6 நாள்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
பெரம்பலூா் மாவட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் 200 ஏக்கா் பரப்பளவில் மல்பெரி சாகுபடி செய்து பட்டுப்புழு வளா்ப்பு தொழிலில் ஈடுபட்டு வருகின்றனா். கடந்த 4 ஆண்டுகளில் 66 விவசாயிகளுக்கு நடவு மானியமாக ரூ. 24,70,500, 37, புழு வளா்ப்பு மனை மானியமாக ரூ. 91,91,250, ரூ. 18,15,000 மதிப்பில் தளவாடங்கள், கிருமி நாசினிகள், புழு வளா்ப்பு பயிற்சிக்காக ரூ. 2,59,000 வழங்கப்பட்டுள்ளது என்றாா் ஆட்சியா் மிருணாளினி.
ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) ராணி, பட்டு வளா்ச்சித்துறை உதவி ஆய்வாளா் கே. மணிகண்டன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

