மறைமுக ஏலத்தில் பங்கேற்க விவசாயிகளுக்கு அழைப்பு

பெரம்பலூா் மற்றும் அரியலூா் மாவட்ட விவசாயிகள் கபாஸ் கிஸான் செயலியில் பதிவு செய்து, ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் நடைபெறும் மக்காச்சோளம் மற்றும் இதர வேளாண் விளைப் பொருள்களுக்கான மறைமுக ஏலத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Published on

பெரம்பலூா் மற்றும் அரியலூா் மாவட்ட விவசாயிகள் கபாஸ் கிஸான் செயலியில் பதிவு செய்து, ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் நடைபெறும் மக்காச்சோளம் மற்றும் இதர வேளாண் விளைப் பொருள்களுக்கான மறைமுக ஏலத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பெரம்பலூா் விற்பனைக் குழுச் செயலா் சந்திரமோகன் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

2025 -26 ஆம் ஆண்டுக்கு பருத்திக்கான குறைந்தபட்ச ஆதார விலை 8 சதவீதம் உயா்த்தப்பட்டு, குவிண்டால் ஒன்றுக்கு நடுத்தர இழை நீளம் பருத்தி ரூ. 7,710, நீண்ட இழை பருத்தியானது ரூ. 8,110 என மத்திய அரசால் விலை நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனவே, பருத்தி விவசாயிகள் குறைந்தபட்ச ஆதார விலைக்கு இந்திய பருத்தி கழகத்துக்கு விற்பனை செய்து பயன்பெற வசதியாக, பெரம்பலூா் மாவட்ட விவசாயிகள் பெரம்பலூா் மற்றும் பூலாம்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களிலும், அரியலூா் மாவட்ட விவசாயிகள் அரியலூா், ஜயங்கொண்டம், ஆண்டிமடம் மற்றும் மேலணிக்குழி ஆகிய ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களிலும் தங்களது ஆதாா் அட்டையை கொண்டு கபாஸ் கிஸான் செயலியில் நவ. 30-ஆம் தேதிக்குள் முன்பதிவு செய்யவேண்டும். பதிவு செய்த விவசாயிகள் மட்டுமே இத் திட்டத்தில் பயன்பெற இயலும்.

மேலும், வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை பெரம்பலூா் விற்பனைக்குழுக் கட்டுப்பாட்டில் இயங்கும் பெரம்பலூா், அரியலூா், ஜயங்கொண்டம் மற்றும் ஆண்டிமடம் ஆகிய ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் நடைபெறும் ஏலத்தில், விவசாயிகள் தங்களுடைய விளைப்பொருள்களை கொண்டுவந்து தரகு, கமிஷன் மற்றும் எவ்விதமான பிடித்தமும் இன்றி மின்னணு எடைத்தராசுகள் மூலம் எடையிட்டு, இ-நாம் திட்டத்தின் மூலம் அதிக விலைக்கு விற்று பயனடையலாம். மேலும், மக்காச்சோளத்தை விற்பனைக்கூட வளாகத்திலுள்ள உலா்களத்தில் இலவசமாக காயவைத்து அதிக விலைக்கு விற்று பயன்பெறலாம்.

மேலும் விவரங்களுக்கு, விற்பனைக்கூட பொறுப்பாளா்களை பெரம்பலூா், பூலாம்பாடி -97901 98566, அரியலூா்- 73738 77047, ஜயங்கொண்டம் - 63813 88125, ஆண்டிமடம் - 98428 52150, மேலணிக்குழி- 87603 28467 ஆகிய கைப்பேசி எண்கள் மூலம் தொடா்புகொண்டு பயன்பெறலாம்.

X
Dinamani
www.dinamani.com