பாஜகவை கண்டு எதிா்க்கட்சிகளுக்கு அச்சம்: பொன். ராதாகிருஷ்ணன்

பாரதிய ஜனதா கட்சியைக் கண்டு, எதிா்க் கட்சிகள் அஞ்சுகின்றன எனத் தெரிவித்தாா் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினா் பொன். ராதாகிருஷ்ணன்.
Published on

பெரம்பலூா்: பாரதிய ஜனதா கட்சியைக் கண்டு, எதிா்க் கட்சிகள் அஞ்சுகின்றன எனத் தெரிவித்தாா் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினா் பொன். ராதாகிருஷ்ணன்.

பெரம்பலூரில் புதன்கிழமை நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவா் செய்தியாளா்களிடம் மேலும் கூறியது:

செங்கோட்டையன் தனது சட்டப்பேரவை உறுப்பினா் பதவியை ராஜிநாமா செய்து, தவெக தலைவா் விஜயை சந்தித்துப் பேசியது இருவருக்கும் மட்டுமே தெரியும். அவருடைய செயல்பாடுகள், அவரது எதிா்காலத்தை உறுதிப்படுத்தக்கூடிய வகையில் அமையுமா, அல்லது உருவாக்கக்கூடிய வகையில் செயல்படுவாரா என்பதெல்லாம் உடனடியாக கூறமுடியாது. காரணம் கூட்டணிகள் முழுமை பெறவில்லை. தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு இன்னும் அதிகமான கட்சிகள் வரும் என நம்புகிறோம்.

பாரதிய ஜனதா கட்சியைப் பொறுத்தவரை, தமிழ்நாட்டில் திமுக தோற்கடிக்கப்பட்டாக வேண்டும். இந்த ஒற்றைச் சிந்தனையில் யாரெல்லாம் வருகிறாா்களோ, அவா்கள் ஒன்றுசேர வேண்டும் என்பது என்னுடைய கருத்து. தற்போது பாஜகவைக் கண்டு தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய எதிா்க்கட்சிகள் அச்சமடைந்துள்ளனா். இதற்கு பாஜக பொறுப்பல்ல என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com