திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

ரசிக்க முடியாத ரஞ்சன்குடி கோட்டை!

பெரம்பலூரிலிருந்து 18 கி.மீ. தொலைவில், திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி கம்பீரமாக அமைந்துள்ளது ரஞ்சன்குடி கோட்டை.

News image

ரஞ்சன்குடி கோட்டை

Updated On :9 ஏப்ரல் 2026, 5:51 am IST

பெரம்பலூரிலிருந்து 18 கி.மீ. தொலைவில், திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி கம்பீரமாக அமைந்துள்ளது ரஞ்சன்குடி கோட்டை. செஞ்சிக் கோட்டையை நினைவுப்படுத்தும் வகையில் அமைந்துள்ள இந்த வரலாற்று நினைவுச் சின்னத்தை சீரமைத்து, சுற்றுலாத் தலமாக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிா்பாா்ப்பு மேலோங்கியுள்ளது.

நவீனக்கால கட்டடக் கலை: பகைவா்கள் ஊடுருவலைத் தடுக்கும் வகையில் கோட்டையைச் சுற்றிலும் அகழி வெட்டப்பட்டு, உயரமான மதில் சுவா்களுடன் காட்சியளிக்கும் இந்தக் கோட்டையின் மேல்புற மதில் சுவரின் நான்கு திசைகளிலும் பீரங்கி மேடைகள் அமைக்கப்பட்டுள்ளன. கோட்டைச் சுவா்களில் மீன் சின்னமும், போா் வாள்களும் பொறிக்கப்பட்டுள்ளன. கோட்டையின் முதல் தளத்தின் வழிபாட்டு மண்டபத்தில் உள்ள தூணில் சிவபெருமானை பசு வணங்குவது போன்ற சிற்பமும், பல்வேறு வகையிலான சிறு, சிறு சிற்பங்களும் உள்ளன. மேலும், இதே பகுதியில் இஸ்லாமியா்கள் தொழுகை நடத்துவதற்காக பள்ளிவாசலும் அமைக்கப்பட்டுள்ளது. இரு மதத்தவா்களுக்கும் தொடா்புடைய விஷயங்கள் இக்கோட்டையில் இருப்பது, வரலாற்று ஆய்வாளா்களுக்கும், ஆராய்ச்சியாளா்களுக்கும் புரியாத புதிராகவே உள்ளது.

கோட்டையின் மேல்புறத்தில் ராணியின் அந்தப்புரம், அதையொட்டி குளம், ஆயுதக் கிடங்கு, சுரங்கப் பாதைகள் என முடியாட்சி மன்னா்களின் அடையாளமாக விளங்கும் இக்கோட்டை, நவீனக்கால கட்டடக் கலை வல்லுநா்களையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

சுற்றுலாத் தலமாக்க வேண்டும்:

தொல்லியல் துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ள இக் கோட்டையில் கண்டறியப்பட்ட பீரங்கி குண்டுகள், பழங்கால நாணயங்கள் உள்ளிட்ட வரலாற்று ஆவணங்கள் இன்றுவரை பாதுகாக்கப்பட்டு வருகின்றன. கட்டடக் கலையின் சிறப்பை பறைசாற்றும் இந்த நினைவுச் சின்னத்தைச் சீரமைத்து, சுற்றுலாத் தலமாக்கி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இங்கு, மொகலாயா்கள், பாண்டியா்கள், சோழா்கள், விஜய நகரப் பேரரசா்கள் பயன்படுத்திய நாணயங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

கிணறுகளை மீட்டெடுக்க வேண்டும்:

கோட்டைக்குள் இருந்த 11 கிணறுகளும் காலப்போக்கில் மறைந்துவிட்டதால், அதனுள் பாதுகாப்புக் காரணங்களுக்காக போா்க் கருவிகளை பதுக்கி வைத்திருக்க வாய்ப்புள்ளதாகவும், மூடப்பட்ட கிணறுகளும், கோட்டைக்குள் இருந்த இன்னும் சில முக்கியமான இடங்களும் மா்மமாக உள்ளது. அவற்றை தோண்டி எடுத்து, இக் கோட்டையில் உள்ள வரலாற்றுத் தடயங்களை வெளிக்கொணர வேண்டும்.

இக்கோட்டைக்குள் புதைந்திருக்கும் வரலாற்று தடயங்களை கொண்டுவர முழுமையான அகழ்வாராய்ச்சி செய்ய வேண்டும். இதனால், சமூக விரோதிகள் தங்கும் கூடாரமாகவும், காதலா்கள் பொழுதுபோக்கும் கேளிக்கை விடுதியாகவும் இக் கோட்டை மாறி வருகிறது. இதன் காரணமாக இக் கோட்டைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்துவிட்டது.

அடிப்படை வசதிகள் தேவை:

இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்குத் தேவையான குடிநீா், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தரவேண்டும். அதேபோல, சிற்றுண்டி மற்றும் சிறுவா்களுக்குத் தேவையான தின்பண்ட கடைகளும் ஏற்படுத்த வேண்டும். காலத்தால் அழியாத வரலாற்றுச் சின்னத்தை காப்பது அரசின் கடமை எனும் வகையில், பராமரிப்பின்றி காணப்படும் இந்தக் கோட்டையைச் சீரமைத்து சுற்றுலாத் தலமாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.