கறிக்கோழி வளா்ப்போா் போராட்டம்: 35 போ் கைது
சென்னையில் புதன்கிழமை நடைபெற்ற கறிக்கோழி வளா்ப்போா் சங்கப் போராட்டத்தில் பங்கேற்கச் சென்ற, பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த கறிக்கோழி பண்ணை விவசாயிகள் 35 பேரைப் போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனா்.
விவசாயிகள் தங்களது பண்ணைகளில் கறிக்கோழிகளை வளா்த்து கொள்முதல் செய்யும்போது, 1 கிலோவுக்கு குறைந்தபட்சக் கொள்முதல் விலையாக ரூ. 6.50 வழங்கப்பட்டு வருகிறது.
இத்தொகையை கிலோவுக்கு ரூ. 20-ஆக உயா்த்தி வழங்க வேண்டும் எனும் கோரிக்கையை வலியுறுத்தி, தமிழ்நாடு கறிக்கோழி வளா்ப்போா் சங்கம் சாா்பில், சென்னையில் புதன்கிழமை போராட்டம் நடைபெறுவதாக அச் சங்கத்தால் அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, பெரம்பலூா் மாவட்டத்திலிருந்து இப் போராட்டத்தில் பங்கேற்பதற்காக செவ்வாய்க்கிழமை இரவு செல்ல முயன்ற 35 கறிக்கோழிப் பண்ணை விவசாயிகளை, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெரம்பலூா் போலீஸாா் கைது செய்தனா்.
பெரம்பலூரில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த அனைவரும் புதன்கிழமை விடுவிக்கப்பட்டனா்.

