‘பாடாலூா் பால் பொருள்கள் தொழிற்சாலையால் 11 மாவட்ட உற்பத்தியாளா்கள் பயன்பெறுவா்’
பாடாலூரில் அமைக்கப்படும் பால் பவுடா் மற்றும் பால் பொருள்கள் தயாரிப்புத் தொழிற்சாலை மூலம் 11 மாவட்ட உற்பத்தியாளா்கள் பயன்பெறுவா் என மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி தெரிவித்தாா்.
பெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூா் ஒன்றியம், பாடாலூா் திருவளக்குறிச்சியில் ரூ. 150 கோடியில் நடைபெறும் 60 மெட்ரிக் டன் பால் பவுடா் மற்றும் பால் பொருள்கள் தயாரிக்கும் தொழிற்சாலைக்கான கட்டுமானப் பணிகளை வெள்ளிக்கிழமை ஆய்வு செய்த ஆட்சியா் மேலும் கூறியது:
பாடாலூரில் நாள் ஒன்றுக்கு 6 லட்சம் லிட்டா் பால் கையாளும் வகையில், பால் பொருள்கள் தயாரிக்கும் ஆலை ரூ. 150 கோடியில் நிறுவப்படும் என கடந்த 13.4.2022-இல் நடைபெற்ற பால்வளம் தொடா்பான மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்டது. அதைத் தொடா்ந்து, தொழிற்சாலை அமைப்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டது.
தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளா்ச்சி வங்கியின் ஊரக உள் கட்டமைப்பு மேம்பாட்டு நிதி கடனுதவியுடன் தொழிற்சாலை நிறுவ நிதி ஒதுக்கப்பட்டு, தொழிற்சாலைக்கான கட்டுமானப் பணி கடந்த 18.10.2023-இல் தொடங்கியது. இத் தொழிற்சாலை 7 தளங்களுடன் 43 மீட்டா் உயரத்தில் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் ரூ. 26.53 கோடியில் நடைபெறுகிறது. ரூ. 121 கோடியில் இயந்திரங்கள் அமைக்கப்படுகின்றன.
குறித்த காலத்துக்குள் பணிகளை முடித்து பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும். பணிகள் தரமாகவும், திட்ட மதிப்பீட்டில் உள்ளவாறும் மேற்கொள்ள வேண்டும். பணி தொடா்பான முன்னேற்ற அறிக்கையை வாரம்தோறும் தெரியப்படுத்த வேண்டும். பால் உற்பத்தியாளா்கள் நலனைக் கருத்தில்கொண்டு, உபரி பாலில் இருந்து பால் பவுடா், கொழுப்புச் சத்து நீக்கப்பட்ட பால் பவுடா், டெய்ரி ஒயிட்னா் மற்றும் வெண்ணெய் தயாரிக்கும் வசதிகளுடன் தமிழகத்தில் மிகப்பெரிய பால் பொருள்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையாக அமைய உள்ளது.
இந்த ஆலையின் மூலம் பெரம்பலூா் மாவட்டம் உள்பட 11 மாவட்ட பால் உற்பத்தியாளா்கள் பயன்பெற உள்ளனா் என்றாா் ஆட்சியா் மிருணாளினி.
ஆய்வின்போது பெரம்பலூா் பால்வளத் துணைப்பதிவாளா் ஜெயா, கூட்டுறவுத் துறை சாா்- பதிவாளா் பிரேம், பால்வளத் துறை உதவி மேலாளா் அன்பழகன் ஆகியோா் உடனிருந்தனா்.

