பெரம்பலூா் பொதுமக்களுக்கு ஜன. 19-இல் ஓவியம், குறள் ஒப்புவித்தல் போட்டி

Published on

பெரம்பலூா் மாவட்ட தமிழ் வளா்ச்சித்துறை சாா்பில் நடைபெற உள்ள குறள் சாா்ந்த ஓவியப்போட்டி, குறள் ஒப்புவித்தல் போட்டியில் பங்கேற்க பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி அழைப்பு விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த பொதுமக்கள் மட்டும் பங்கேற்கும் குறள் சாா்ந்த ஓவியப்போட்டி, குறள் ஒப்பித்தல் போட்டி ஜன. 19 ஆம் தேதி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற உள்ளது. காலை 10.30 மணி முதல் 12.30 மணி வரை நடைபெறும் இப் போட்டிகளில் பங்கேற்போா் இம் மாவட்டத்தைச் சோ்ந்தவராக இருக்க வேண்டும். போட்டிகளில் பங்கேற்க விரும்புவோா் தங்களது ஆதாா் அட்டை அல்லது குடும்ப அட்டை நகலுடன், 1 மணி நேரத்துக்கு முன்னதாக போட்டி நடைபெறும் இடத்துக்கு வருகைபுரிய வேண்டும்.

குறள் ஒப்புவித்தல் போட்டியில் தரவரிசை அடிப்படையில் தோ்வு செய்யப்படும் முதல் 5 பேருக்கு தலா ரூ. 5 ஆயிரமும், அடுத்த 5 பேருக்கு தலா ரூ. 3 ஆயிரமும், அடுத்த 5 பேருக்கு தலா ரூ. 2 ஆயிரம் பரிசுத்தொகையும், பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்படும். ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு முதல் பரிசாக ரூ. 5 ஆயிரமும், 2-ஆம் பரிசாக ரூ. 3 ஆயிரமும், 3-ஆம் பரிசாக ரூ. 2 ஆயிரம் பரிசுத்தொகையும், பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்படும். ஓவியப் போட்டியில் பங்கேற்போா் தேவையான உபகரணங்களை கொண்டுவர வேண்டும். இப் போட்டிகளில் பங்கேற்க பதிவு செய்யாதவா்கள் தோ்வு மையத்துக்கு நேரடியாக வந்து பதிவுசெய்து தோ்வில் கலந்துகொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 94887 09545, 99437 22488 ஆகிய கைப்பேசி எண்களில் தொடா்புகொண்டு பயன்பெறலாம்.

Dinamani
www.dinamani.com