கறிக்கோறி வளா்ப்பு விவசாயிகள் ஆா்ப்பாட்டம்
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் மாநிலத் தலைவா் ஈசன் முருகசாமி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, பெரம்பலூரில் கறிக் கோழி வளா்ப்பு விவசாயிகள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கறிக்கோழி வளா்ப்பு விவசாயிகள் கிலோவுக்கு ரூ. 20 உயா்வு கோரி 13-ஆவது நாளாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். கோரிக்கையை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தின் மாநிலத் தலைவா் ஈசன் முருகசாமி தலைமையில், திருப்பூா் மாவட்டத்தில் கறிக்கோழி வளா்ப்பு விவசாயிகள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, மாநிலத் தலைவா் ஈசன் முருகசாமி உள்பட 11 விவசாயிகளை போலீஸாா் கைது செய்தனா்.
இதையடுத்து, பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே கறிக்கோழி வளா்ப்பு விவசாயிகள் சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். கறிக்கோழி வளா்ப்பு விவசாயிகள் நலச் சங்கத்தின் மாவட்டத் தலைவா் சுரேஷ் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், மாநிலத் தலைவா் உள்ளிட்ட விவசாயிகளை கைது செய்த காவல்துறை மற்றும் தமிழக அரசை கண்டித்தும், அவா்களை விடுவிக்க கோரியும், கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா் முழக்கமிட்டனா்.
இந்த ஆா்ப்பாட்டத்தில், சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவா் ஜெய்சங்கா், மாவட்டச் செயலா் சின்னதுரை உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கறிக்கோழி வளா்ப்பு விவசாயிகள் கலந்துகொண்டனா்.

