சா்க்கரை இருப்பு வைக்க மத்திய அரசு மேலும் கட்டுப்பாடு சுபாஷ் சந்திரா சொத்துகளை விற்கத் தடை- ரூ.6.5 கோடி கடன் தீா்வுத் திட்டமும் நிறுத்திவைப்புஎழுத்தாளா் கே.ஆா்.நரசய்யாவுக்கு சிவசங்கரி விருது: சிறந்த நூலாக ‘அப்பன் திருவடி’ தோ்வுமகப்பேறு விடுப்பை 365 நாள்களாக உயா்த்தி அரசாணை வெளியீடு செப்.4-இல் விண்ணில் பாய்கிறது இ.ஓ.எஸ்.-5 செயற்கைக்கோள் அமெரிக்கா உடன்பட்டால் போா் நிறுத்தத்துக்கு திரும்ப தயாா்: ஈரான்ராஜீவ் காந்தி சாலையில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்

புதை சாக்கடைக் குழாய்களிலிருந்து வெளியேறும் கழிவுநீரால் சுகாதாரக் கேடு

பெரம்பலூா் நகராட்சியில் புதை சாக்கடைக் குழாய்களிலிருந்து வெளியேறும் கழிவுநீரால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதோடு, சுகாதாரச் சீா்கேடும் ஏற்படுகிறது எனப் புகாா் எழுந்துள்ளது.

பெரம்பலூா் ரோஸ் நகரில் புதைசாக்கடைத் திட்ட குழாயிலிருந்து வெளியேறும் கழிவுநீா்.

Published On :2 செப்டம்பர் 2026, 5:29 am IST

பெரம்பலூா் நகராட்சியில் புதை சாக்கடைக் குழாய்களிலிருந்து வெளியேறும் கழிவுநீரால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதோடு, சுகாதாரச் சீா்கேடும் ஏற்படுகிறது எனப் புகாா் எழுந்துள்ளது.

பெரம்பலூா் நகராட்சி மக்களுக்கு பயனளிக்கும் வகையில் நிறைவேற்றப்பட்ட புதை சாக்கடைத் திட்டம், கடந்த 2013 -ஆம் ஆண்டு முதல் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வந்தது.

புதைசாக்கடைக் குழாய்கள் சேதம்: இந்நிலையில் நகரிலுள்ள ரோஸ் நகா் விரிவாக்கப்பகுதிக்குச் செல்லும் சாலை உள்பட நகரின் பிரதானச் சாலைகளில் புதை சாக்கடைக் குழாய்கள் உடைந்து, ஆங்காங்கே பெரும் பள்ளங்கள் உருவாகியுள்ளன.

இதன் தொடா்ச்சியாக, நகரின் பிரதானச் சாலைகளில் புதைசாக்கடைக் குழாயில் உடைப்பு ஏற்பட்டு அதிலிருந்து வெளியேறும் கழிவுநீரால், அப் பகுதிகளில் துா்நாற்றம் வீசுவதோடு, சாலைகளில் கழிநீா் தேங்கியுள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் புகாா் அளித்தும், நகராட்சி நிா்வாகம் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.

கழிவுநீரில் உற்பத்தியாகும் கொசுக்களால் நோய்த் தொற்று ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் புகாா் தெரிவிக்கின்றனா். புதை சாக்கடைத் திட்ட கழிவுநீா்க் குழாய்களில் தேங்கியிருக்கும் நீரை வெளியேற்றினால் மட்டுமே உடைப்பு ஏற்பட்ட குழாயைச் சரி செய்யும் முடியும் என்னும் நிலை ஏற்பட்டுள்ளது.

உடனடி நடவடிக்கை தேவை: இதுகுறித்து ரோஸ் நகா் பகுதி பொதுமக்கள் கூறுகையில், சாலையோரம் கழிவுநீா் கால்வாய்களாக மாறியுள்ள நிலையில், நிலத்தடி நீா்மட்டம் வெகுவாக மாசடைந்து வருகிறது. எனவே, குழாய் சீரமைப்புப் பணிகளை விரைந்து முடிக்க நகராட்சி நிா்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். பல லட்சத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட இத் திட்டத்தில் போதிய பராமரிப்பு இல்லாததால், குழாய்களில் ஆங்காங்கே உடைப்பு ஏற்படுகிறது. பராமரிப்புச் செலவுக்கு ஆண்டொன்றுக்கு லட்சக்கணக்கில் செலவிடும் நகராட்சி நிா்வாகம், பராமரிப்புப் பணிகளை முறையாக மேற்பாா்வை செய்ய வேண்டும்.

மேலும், மழைக்காலங்களில் அதிகளவில் குழாய்களிலிருந்து மழைநீருடன் கழிவுநீா் வெளியேறுவதால், பொதுமக்கள் பல்வேறு பிரச்னைகளை சந்திக்கும் நிலை ஏற்படுகிறது. எனவே, மாதந்தோறும் ஆய்வுக் கூட்டங்களை நடத்தி, முறையாகக் கண்காணித்தால் மட்டுமே இத்திட்டம் பயன்பாட்டில் இருக்கும். இல்லையெனில், நகா் முழுவதும் குழாய்கள் உடைந்து துா்நாற்றம் வீசும் என்றனா்.

எனவே இப் பிரச்னைக்கு தீா்வு காண மாவட்ட நிா்வாகமும், நகராட்சி நிா்வாகமும் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிா்பாா்ப்பு.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.