ஆபத்தை விளைவிக்கும் சிஎப்எல் பல்புகள்: பொதுவெளியில் கொட்டப்படும் அவலம்

சுற்றுச்சூழலுக்கு ஆபத்தைத் தரும் பாதரசத்தை உள்ளடக்கிய சிஎப்எல் பல்புகள், முறைப்படி அழிக்கப்படாமல் பொது வெளியில் கொட்டப்படும் அவலம் புதுக்கோட்டை மாவட்டத்தில் காணப்படுகிறது.
புதுக்கோட்டை அரிமளம் சாலையிலுள்ள வீட்டுமனை போடப்பட்ட பகுதியில் குவியலாகக் கொட்டப்பட்டுக் கிடக்கும் பயன்படுத்தப்பட்ட சிஎப்எல் பல்புகள்.
புதுக்கோட்டை அரிமளம் சாலையிலுள்ள வீட்டுமனை போடப்பட்ட பகுதியில் குவியலாகக் கொட்டப்பட்டுக் கிடக்கும் பயன்படுத்தப்பட்ட சிஎப்எல் பல்புகள்.
Updated on
1 min read

சுற்றுச்சூழலுக்கு ஆபத்தைத் தரும் பாதரசத்தை உள்ளடக்கிய சிஎப்எல் பல்புகள், முறைப்படி அழிக்கப்படாமல் பொது வெளியில் கொட்டப்படும் அவலம் புதுக்கோட்டை மாவட்டத்தில் காணப்படுகிறது.

‘காம்பாக்ட் புளோரோசென்ட் லாம்ப்ஸ்’ என்றழைக்கப்படும் சிஎப்எல் பல்புகள் தற்போது பொதுமக்களால் பெரிதும் விரும்பி வாங்கிப் பயன்படுத்தப்படுகிறது. இதற்குப் பிரதான காரணம் மின் பயன்பாடு குறைவும், அதிக வெளிச்சம் கிடைப்பதும்தான்.

மின்பயன்பாட்டைக் குறைக்க மஞ்சள் நிற வெளிச்சத்தை உமிழும் குண்டு பல்புகளை மாற்ற, மத்திய, மாநில அரசுகளே நேரடியாக களத்தில் இறங்கி சிஎப்எல் பல்புகளையும், எல்இடி பல்புகளையும் பரிந்துரை செய்தது மட்டுமல்லாமல், தெரு விளக்குகளில் மாற்றுவதற்கும் திட்டங்களை வகுத்தன.

வீடுகளில் பயன்படுத்துவதற்கான இந்த வகையான விளக்குகளுக்கு வரிச்சலுகை தரப்பட்டு, குறைந்த விலை என்ற பெயரில் அரசு அலுவலகங்களில் விற்பனையும் மேற்கொள்ளப்பட்டது. இவ்வாறாக தற்போது ஏறத்தாழ எல்லா வீடுகளிலும் சிஎப்எல் பல்புகள் ஒளிருகின்றன. ஆனால், இவற்றால் ஏற்படும் பாதிப்பு இதுவரை பொதுமக்களுக்கு முறையாக சென்று சேரவில்லை.

அதிக பாதரசம் கலந்த இந்த வகையான பல்புகளை, முறையாக அழிப்பதற்கு சுற்றுச்சூழல் துறை வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. பயன்பாடு முடிந்த பல்புகளை பொதுவெளியில் வீசக் கூடாது, உடைக்கக் கூடாது. முறையாக உள்ளாட்சி நிறுவனங்கள் மூலம் அவற்றை சேகரித்து, பாதுகாப்பான முறையில் அவற்றை அழிக்க- மறுசுழற்சி செய்யவும் சுற்றுச்சூழல் துறை வழிகாட்டியுள்ளது.

ஆனால், இந்த வழிகாட்டுதல்கள் எதுவும் முறையாக செயல்படுத்தப்படுவதில்லை. புதுக்கோட்டை மாவட்டத்தின் பல பகுதிகளிலும் குறிப்பாக, நகருக்கு வெளியே காலிமனைகள், குப்பைகளைக் கொட்டும் இடங்களிலும் குவியல் குவியலாக இந்த பல்புகள் கொட்டி, உடைக்கப்படும் அவலத்தைக் காண முடியும்.

நிலத்திலும், காற்றிலும் இந்தப் பாதரசம் கலந்து சூழலுக்கு பெரும் கேட்டை விளைவிக்கும் என்பதோடு மட்டுமல்ல, கண்ணாடித் துண்டுகள் மனிதா்களுக்கும், விலங்கினங்களுக்கும் காயத்தை ஏற்படுத்தும்.

எனவே, பயன்படுத்தப்பட்ட பல்புகளை மொத்தமாக கொண்டு வந்து கொட்டுவோா் யாா் எனக் கண்காணித்து, அவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நகராட்சி, பேரூராட்சி போன்ற உள்ளாட்சி அமைப்புகள் மூலம் சிஎப்எல் பல்புகளையும் வீடு வீடாகச் சென்று பாதுகாப்பாக சேகரிக்கும் வழிமுறைகளையும் வகுத்து, சேகரித்து, முறைப்படி அழிப்பதை மாவட்ட நிா்வாகம் உறுதி செய்ய வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com