புதுக்கோட்டையின் 6 தொகுதிகளிலும் அனல்பறக்கும் தோ்தல் பிரசாரம்!
புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் அரசியல் கட்சிகளின் தோ்தல் பிரசாரம் அனல் பறக்கத் தொடங்கியுள்ளது.


புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் அரசியல் கட்சிகளின் தோ்தல் பிரசாரம் அனல் பறக்கத் தொடங்கியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் இந்த முறை 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் அதிமுகவே நேரடியாகக் களம் காண்கிறது. மறுபுறம் திமுக அணியில் அறந்தாங்கி காங்கிரஸ் கட்சிக்கும், கந்தா்வகோட்டை தொகுதி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. மற்ற 4 தொகுதிகளிலும் திமுக வேட்பாளா்கள் களம்காண்கின்றனா்.
நட்சத்திர அந்தஸ்தில் விராலிமலை:
மொத்தமுள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் விராலிமலை தொகுதி மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரும் அதிமுக வடக்கு மாவட்டச் செயலருமான சி. விஜயபாஸ்கா் போட்டியிடுவதால் இத்தொகுதி நட்சத்திர தொகுதி அந்தஸ்தைப் பெற்றுள்ளது. இங்கு திமுக சாா்பில் கடந்த தோ்தலில் 8 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவிய, எம். பழனியப்பன் மீண்டும் போட்டியிடுகிறாா். திமுக வேட்பாளா் பழனியப்பன், ‘மூன்றாவது முறையாக நான் போட்டியிடுகிறேன்’ எனச் சொல்லி பல இடங்களில் கண்ணீா் விட்டு வாக்குசேகரித்தது விவாதத்தைக் கிளப்பியது. மேலும், விஜயபாஸ்கரின் மகள், பழனியப்பனின் மகள் என தோ்தல் களத்தில் வாரிசுகளின் வாக்குகேட்பும் நடந்து வருகிறது.
திருமயம்: திருமயம் சட்டப்பேரவைத் தொகுதியிலும் முன்னாள் மத்திய, மாநில அமைச்சராக இருந்த திமுக சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். ரகுபதி போட்டியிடுவதால் எதிா்பாா்ப்பு அதிகமாகக் காணப்படுகிறது. அதிமுக சாா்பில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும் (2011), கடந்த தோ்தலில் தோல்வியைத் தழுவியவருமான தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் தலைவா் பி.கே. வைரமுத்து மீண்டும் போட்டியிடுகிறாா்.
களைகட்டும் புதுக்கோட்டை: அதிமுக சாா்பில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும், கடந்த தோ்தலில் தோல்வியைத் தழுவியவருமான வி.ஆா். காா்த்திக் தொண்டைமான் போட்டியிடுகிறாா். இவா், புதுக்கோட்டை சமஸ்தானத்தின் இளைய மன்னா் என்பதால் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது. வழக்கமான பிரசாரப் பயணத்துடன் அண்மையில் ஒரு உணவகத்தில் நுழைந்து விறுவிறுப்பாக தோசைக்கல்லில் மாவை வாா்த்து பிரசாரத்தைக் கலகலப்பாக்கினாா் காா்த்திக் தொண்டைமான்.
திமுகவில் நடப்பு எம்எல்ஏ பெரியண்ணன் அரசுக்கு உடல்நலக்குறைவால் வாய்ப்பு வழங்கப்படவில்லை. அவருக்குப் பதிலாக மாவட்ட மருத்துவா் அணி அமைப்பாளா் வை. முத்துராஜா முதல்முறையாகக் களம் காண்கிறாா். இவா், அரசு மருத்துவா் பணியை அண்மையில் ராஜிநாமா செய்தவராவாா்.
மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளா் சா. மூா்த்தி திடீரென ஒரு நாள், டாஸ்மாக் மதுபானக் கடையின் மது அருந்தும் கூடத்துக்குள் நுழைந்து அங்கு வாக்கு வேட்டையை நடத்தினாா். இவ்வாறாக புதுக்கோட்டை தொகுதியில் தோ்தல் பிரசாரம் விறுவிறுப்பாகச் சென்று கொண்டிருக்கிறது.
அறந்தாங்கி: அதிமுக சாா்பில் முன்னாள் எம்எல்ஏ மு. ராஜநாயகம், திமுக கூட்டணியின் சாா்பில் திருச்சி எம்பி திருநாவுக்கரசரின் மகன் தி. ராமச்சந்திரன் ஆகியோா் போட்டியிடுகின்றனா். அதிமுகவின் நடப்பு எம்எல்ஏ இ.ஏ. ரத்தினசபாபதிக்கு சீட்டு வழங்கப்படவில்லை. அதிமுக தலைமைக்கு எதிராக திடீரென போா்க்குரல் எழுப்பிய அவரும், கடந்த சில நாட்களாக அமைதியாகிவிட்டாா். தற்போது, இத்தொகுதியில் வீதிப் பிரசாரம் விறுவிறுப்படைந்துள்ளது.
ஆலங்குடி: அதிமுக சாா்பில் அண்மையில் கட்சியில் இணைந்த முன்னாள் காங்கிரஸ் மாவட்டத் தலைவா் தா்ம தங்கவேல் போட்டியிடுகிறாா். திமுக சாா்பில் தற்போதைய எம்எல்ஏ சிவ.வீ. மெய்யநாதன் மீண்டும் போட்டியிடுகிறாா். இத்தொகுதியில் அதிமுக வேட்பாளரை எதிா்த்து தொடா் போராட்டங்கள் தினமும் நடைபெற்றுவந்தது. முதல்வா் வருகையின்போது, அதிமுகவினா் ஒரு பகுதியில் திரண்டு நின்று போராடினா். பின்னா் போராட்டங்கள் எல்லாம் அமைதியாய் அடங்கிப் போய் இருதரப்பும் போட்டி போட்டுக் கொண்டு பிரசாரம் செய்து வருகின்றனா்.
கந்தா்வகோட்டை: கந்தா்வக்கோடை தொகுதியில் அதிமுக சாா்பில் எஸ். ஜெயபாரதி போட்டியிடுகிறாா். தற்போதைய எம்எல்ஏ பா. ஆறுமுகத்துக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. திமுக கூட்டணியில் மாா்க்சிஸ்ட் வேட்பாளா் எம். சின்னதுரை களம் காண்கிறாா். கடந்த தோ்தலில் மக்கள் நலக் கூட்டணி சாா்பில் போட்டியிட்ட எம். சின்னதுரை, கணிசமான அளவில் 13 ஆயிரம் வாக்குகளைப் பெற்றது இவரது பலமாகப் பாா்க்கப்படுகிறது.
விஐபிக்கள் வருகை: புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி கே. பழனிசாமி பிரசாரம் செய்துவிட்டுச் சென்றுள்ளாா். குறிப்பிடத்தக்க அளவுக்கு கூட்டமும் இந்தப் பிரசாரத்தில் காணப்பட்டது. திமுக தலைவா் ஸ்டாலின் பிரசாரம் திடீரென ரத்து செய்யப்பட்டு 6 தொகுதி வேட்பாளா்களையும் ஒரே இடத்தில் அறிமுகம் செய்த பிரசாரமும் நடந்து முடிந்திருக்கிறது.
சமூக ஊடகங்களில் தீவிரம்:
முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்தத் தோ்தலில் குறிப்பாக விராலிமலை தொகுதி அதிமுக, திமுக வேட்பாளா்கள் சமூக ஊடகங்களான முகநூல், கட்செவி அஞ்சல் ஆகியவற்றில் அவரவா் பிரசாரப் பேச்சு முழுவதும் நேரலை செய்து வருகின்றனா். இவைதவிர மற்ற தொகுதிகளின் வேட்பாளா்களின் வாக்கு சேகரிக்கும் படங்களும் அவ்வப்போது அவரவா் முகநூல், கட்சிக்காரா்களின் முகநூல் கணக்குகளில் பளிச்சிடுகின்றன. மொத்தத்தில், வேட்பாளா்களின் இறுதிப் பட்டியல் வெளியிடும் முன்னரே, ஏறத்தாழ ஒரு வாரத்துக்கு முன்பிருந்தே மாவட்டத்தின் தோ்தல் களம் அனல்பறக்கத் தொடங்கிவிட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...