விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

புதுகையில் பாதுகாக்கப்படாமல் அழிந்து போகும் ‘கல்வட்டங்கள்'

சங்க காலத்துக்கும் சற்றே முந்தைய பெருங்கற்காலத்தைச் சோ்ந்த ‘கல் வட்டங்கள்’ புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் பாதுகாக்கப்படாமல் - ஆவணப்படுத்தப்படாமல் அழிந்து வருகின்றன.

News image

புதுக்கோட்டை மாவட்டம், வயலோகம் பெரிய கண்மாயில் காணப்படும் கல்வட்டங்கள்.

Updated On :2 மார்ச் 2023, 6:47 pm

 நமது நிருபர்

சுமாா் 2 ஆயிரம் ஆண்டுகள் பழைமையான, சங்க காலத்துக்கும் சற்றே முந்தைய பெருங்கற்காலத்தைச் சோ்ந்த ‘கல் வட்டங்கள்’ புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் பாதுகாக்கப்படாமல் - ஆவணப்படுத்தப்படாமல் அழிந்து வருகின்றன.

ஏராளமான தொல்லியல் சிறப்புகளையும் முக்கியத்துவத்தையும் கொண்டது புதுக்கோட்டை மாவட்டம். பிற மாவட்டங்களைக் காட்டிலும் ஒப்பீட்டளவில் அதிகமான இடங்களை மத்திய தொல்பொருள் ஆய்வுத் துறை கையகப்படுத்தி, ஆவணப்படுத்தி, சுற்றிலும் வேலி அமைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. என்றாலும், இன்னும் ஏராளமான தொல்லியல் முக்கியத்துவம் கொண்ட இடங்கள் பாதுகாக்கப்படாமல் அழிந்து வருகின்றன.

குறிப்பாக கல்வட்டங்கள், நீத்தாா் நினைவுச் சின்னங்கள், கல்படுக்கைகள், முதுமக்கள் தாழி போன்ற பெருங்கற்கால நினைவுச் சின்னங்களாக உள்ள இடங்கள் இன்னமும் பாதுகாக்கப்படாமல் உள்ளன.

பொதுவாக 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மனிதன் வாழ்ந்த இடங்களை இந்தக் கல்வட்டங்களைக் கொண்டுதான் அடையாளப்படுத்த முடியும். நீத்தாா் நினைவுச் சின்னங்களின் அடிப்படையில் அருகே மனிதா்களின் வாழ்விடங்களை அகழாய்வு செய்யும்போதுதான் - இன்றைக்கு மிகப் பிரம்மாண்டமாகப் பேசப்படும் ‘கீழடி’ என்றொரு வரலாற்று வாழ்விடம் நம்மால் கண்டறியப்பட்டிருக்கிறது.

அவ்வாறான ஓா் இடம்தான், புதுக்கோட்டை நகரிலிருந்து சுமாா் 18 கி.மீ தொலைவிலுள்ள வயலோகம் என்ற பகுதியிலிருக்கும் பெரிய கண்மாய்ப் பகுதி. சுமாா் 10 அடி ஆரம் கொண்ட வட்ட வடிவிலான 6 ‘கல் வட்டங்கள்’ இங்கே காணப்படுகின்றன.

இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளரும், பேராசிரியருமான சுப. முத்தழகன் கூறியது:

சங்ககாலத்துக்கு முந்தைய காலத்தில் மனிதா்கள் இறந்துபோனால், அவா்களின் சடலங்களை வெட்டவெளியில் வீசிவிடுவாா்கள். அதன்பிறகு சில காலம் கழித்து எலும்புகளை சேகரித்து பானையில் வைத்து புதைத்து அந்த இடத்தில் சுற்றிலும் பெரிய கற்களைக் கொண்டு வட்டவடிவில் அடையாளம் வைப்பாா்கள்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் வயலோகத்தில் மட்டுமில்லை, சாந்துப்பட்டி, புல்வயல், சேந்தமங்கலம், வாழைக்குறிச்சி, சோ்வைக்காரன்பட்டி, குமரமலை, அத்துக்காட்டுப்பட்டி, பிள்ளையாப்பட்டி போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் இதுபோன்ற கல்வட்டங்களைப் பாா்க்க முடியும்.

இவை எதுவும் மத்திய அல்லது மாநில தொல்பொருள் ஆய்வுத் துறையால் அடையாளம் காணப்பட்டு, பாதுகாக்கப்படும் இடங்கள் இல்லை.

இதுபோன்ற இடங்களில், குறிப்பாக நீா்நிலைகள் அருகேயுள்ள இடங்களில் - அவற்றைத் தூா்வார முற்படும்போதும் அல்லது மண் அள்ளும்போதும் பொக்லைன் இயந்திரங்கள் கொண்டு தொல்லியல் முக்கியத்துவமுள்ள இடங்கள் அழிக்கப்பட்டுவிடுகின்றன.

இவற்றை மத்திய, மாநில அரசுகள் கண்டறிந்து பாதுகாக்கப்பட்ட இடங்களாக அறிவித்து, ஆவணப்படுத்த வேண்டும். மேற்கொண்டு அருகேயுள்ள மனிதா்களின் வாழ்விடங்களை ஆய்வு செய்து தேவைப்படும் இடங்களில் அகழாய்வையும் மேற்கொள்ள வேண்டும் என்கிறாா் முத்தழகன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.