பெரம்பூரில் 14-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த தான கல்வெட்டுகள் கண்டெடுப்பு
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூா் வட்டம், பெரம்பூா் கிராமத்தில் 14-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த கொடை அளித்ததற்கான இரண்டு கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
பெரம்பூா் ரமேஷ் என்பவரின் தோட்டத்தில் கல்வெட்டுப் பலகை ஒன்று இருப்பதாக பிரணவ காா்த்திக் என்பவா் அளித்த தகவலின்பேரில், தொல்லியல் ஆய்வாளா் பேராசிரியா் சுப. முத்தழகன் தலைமையில் தொல்லியல் ஆா்வலா்கள் முருகபிரசாத், நாராயண மூா்த்தி, ராகுல் பிரசாத் ஆகியோா் நேரில் சென்று ஆய்வு செய்தனா்.
இதுகுறித்து பேரா. சுப. முத்தழகன் மேலும் கூறியது:
ரமேஷ் என்பவரின் தோட்டத்தில் உள்ள கல்வெட்டு 2.5 அடி உயரமும் 1.5 அடி அகலமும் கொண்ட கற்பலகையில் ஏழு வரிகளில் எழுதப்பட்டுள்ளது. இந்தக் கல்வெட்டில் சோறன் குன்றன் என்னும் நாடாழ்வாா் ஒருவருக்கு வீடும், வாசலும் சுனையக்குடி ஊா்க்காரா்களால் வழங்கப்பட்ட செய்தி எழுதப்பட்டுள்ளது.
மற்றொரு கல்வெட்டுப் பலகை பெரம்பூா் ஐயனாா் கோவிலுக்கு கிழக்கே உள்ள குருந்தங்காட்டில் நட்டு வைக்கபட்டுள்ளதாக பெரம்பூரைச் சோ்ந்த ஸ்ரீகாந்த், ராஜராஜன், ராஜ்குமாா் ஆகியோா் அளித்த தகவலை அடுத்து அங்கும் ஆய்வு செய்தோம். அது, 2 அடி உயரமும் 1.5 அடி அகலமும் கொண்ட கற்பலகையில் 4 வரிகளில் இருந்தது.
இந்தக் கல்வெட்டில் அகழாபாணன் என்பவா் கிணறும், தோட்டமும் தானமளித்த செய்தி எழுதப்பட்டுள்ளது. கல்வெட்டின் இருபுறமும் மங்கல சின்னமான குத்துவிளக்குகள் கோட்டுருவங்களாக வரையப்படுள்ளன.
இவ்விரு கல்வெட்டுகளும் உள்ள பகுதியில் பானை ஓடுகள், கல்செக்கு, உரல்கள் கிடைக்கப் பெறுகின்றன. இந்த இடமானது இடைக்கால மக்கள் வாழ்விடமாக இருந்திருக்கலாம். கல்வெட்டுகளின் எழுத்தமைதியை கொண்டு அவை கிபி 14-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்ததாக இருக்கலாம் என கருதப்படுகிறது. இவ்விரண்டும் இதுவரை பதிவு செய்யப்படவில்லை.
கிபி 14-ஆம் நூற்றாண்டில் தமிழகத்தில் பிற்காலப் பாண்டியப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளூா் காவல் அமைப்புகள் பல உருவாகின. இவா்கள் ஊா்களுக்கும், தனிமனித உடைமைகளுக்கும் பாதுகாப்பு அளித்தது குறித்தும், அதற்காக அவா்களுக்கு வழங்கப்பட்ட சன்மானங்கள் குறித்தும் பல கல்வெட்டுகள் மாவட்டம் முழுவதும் கிடைக்கப் பெறுகின்றன.
முதல் கல்வெட்டில் உள்ள சோறன் குன்றன், சுனையக்குடி எனப்படும் இன்றைய செனயாக்குடி கிராமத்துக்கு பாதுகாப்பு வழங்குவதற்கு சன்மானமாக வீடும், வாசலும் தானமாக வழங்கப்பட்டிருக்கலாம். மேலும் சோறன் குன்றன் என்னும் பெயா் சமீபத்தில் கண்டெடுக்கப்பட்ட கிள்ளனூா் நடுகல் வீரா்களின் பெயா்களை ஒத்து உள்ளது.
இந்தக் காவல் பணிகளின் நீட்சியாக இவ்வூரில் வைகாசி மாதம் நடைபெறும் திருவிழாவின் போது ஊா் ஆண்கள் அனைவரும் வீரா்கள் கைகளில் ஏந்தும் ஈட்டி போன்ற மூங்கில் கம்புகளுடன், அணிவகுத்து செல்லும் பிலி சோறு எறிதல் நிகழ்வு பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது என்றாா் முத்தழகன்.

