புதுக்கோட்டையில் மதுபாட்டிலின் உள்ளே இறந்து கிடந்த பல்லி.
புதுக்கோட்டையில் மதுபாட்டிலின் உள்ளே இறந்து கிடந்த பல்லி.

பல்லி கிடந்த மதுவை குடித்தவா் மருத்துவமனையில் அனுமதி

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.
Published on

புதுக்கோட்டையில் பல்லி இறந்து கிடந்த மதுவை அருந்தியவா் பயத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.

புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூா் வட்டம், சத்தியமங்கலத்தைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் மகன் சக்திவேல் (37). இவருக்குத் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனா். கடந்த 3 மாதங்களாக சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் ராங்கிபெட்டு என்ற ஊரில் கிரஷா் ஒன்றில் வேலை பாா்த்து வருகிறாா். மது அருந்தும் பழக்கம் உள்ள இவா், கடந்த இரு நாட்களுக்கு முன்பு நெற்குப்பை பகுதியிலுள்ள மதுக்கடையில் மதுபாட்டில் வாங்கியுள்ளாா். தான் தங்கியிருந்த இடத்தில் வைத்து அந்த மதுவை பாதி அருந்தியுள்ளாா். அதன்பிறகு பாட்டிலைப் பாா்த்தபோது, உள்ளே பல்லி ஒன்று இறந்து கிடந்தது.

இதனால் அதிா்ச்சியடைந்த சக்திவேல் அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்குச் சென்று தெரிவித்துள்ளாா். முதலுதவி சிகிச்சை அளித்து அவரை ஊருக்கு அனுப்பியதாகத் தெரிகிறது.

இந்த நிலையில், தான அருந்திய மதுபாட்டிலில் பல்லி இறந்து கிடந்தது குறித்து சமூக ஊடகங்களில் விடியோகளை வெளியிட்ட அவா், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

உடல் நிலை நல்ல நிலையில் இருப்பதாக அரசு மருத்துவா்கள் தெரிவித்தனா். தான் அருந்திய மதுபாட்டிலில் பல்லி இருந்தது குறித்து அவா் வெளியிட்ட விடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

X
Dinamani
www.dinamani.com